இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் திராவிட் உடனான நெகிழ்ச்சியான சம்பவம் ஒன்றை பகிர்ந்துள்ளார் இந்திய அணியின் முன்னாள் வீரரும், வர்ணனையாளருமான லட்சுமண் சிவராமகிருஷ்ணன். ட்விட்டர் பயனர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு தனது பதிலில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

கிரிக்கெட் விளையாட்டு ‘ஜென்டில்மென் கேம்’ என அறியப்படுகிறது. அதில் இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் திராவிட்டுக்கு தனி இடம் இருக்கும். இந்நிலையில், அவரது மற்றொரு பக்கத்தை இந்த ட்வீட்டில் சிவராமகிருஷ்ணன் பகிர்ந்துள்ளார். இது அவரது பெருந்தன்மையை வெளிக்காட்டும் வகையில் உள்ளது.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ், ஃபீல்ட் செட்-அப்பிற்கு ஏற்ற வகையில் பந்து வீசவில்லை. மாறாக ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் அதை திறம்பட செய்திருந்தனர். இந்த மாதிரியான நேரங்களில் சிவராமகிருஷ்ணன் போன்ற வல்லுனர்கள் அவசியம் என அந்த ட்வீட்டில் அந்த பயனர் சொல்லி இருந்தார். அதற்கு சிவராம கிருஷ்ணன் பதில் கொடுத்துள்ளார்.

“நான் எனது சேவையை ராகுல் திராவிட்டுக்கு வழங்க முன்வந்தேன். ஆனால், நான் அவருக்கு சீனியர் என்பதால் அவருக்கு கீழ் நான் சுழற்பந்து வீச்சாளர்களுடன் பணியாற்றுவது குறித்து பெருந்தன்மையுடன் வேண்டாம் என்றார்” என சிவராமகிருஷ்ணன் தனது ட்வீட்டில் சொல்லி உள்ளார். அதாவது தனது சீனியர் தனக்கு கீழ் பணியாற்றுவது நல்லதல்ல என ராகுல் திராவிட் சொல்லியுள்ளார். அந்த அளவுக்கு சீனியர் வீரர்களுக்கு அவர் மதிப்பு கொடுக்கிறார் என்பது தெரிகிறது.