கனமழை எச்சரிக்கையின் எதிரொலியாக புதுச்சேரிக்கு மூன்று பேரிடர் குழுக்கள் வருகின்றன. இதில் புதுச்சேரியில் இரு குழுக்களும், காரைக்காலுக்கு ஒரு குழுவும் செல்லும். கடலுக்கு மீன்பிடிக்க சென்ற 2,353 படகுகளும் கரை திரும்பின.
வங்கக் கடலில் புதிதாக உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி மென்டூஸ் என்ற பெயருடன் புயலாக வலுப்பெற உள்ளது. இதனால் 9-ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரியில் பல மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என வானிலை மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. சில இடங்களில் மிக மிக கனமழை பெய்யும் என்றும், இதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படியும் வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது. இதையடுத்து புதுச்சேரி தலைமை செயலகத்தில் அனைத்து துறை அதிகாரிகளின் பேரிடர் மேலாண்மை கூட்டம் இன்று நடந்தது.
தலைமைச்செயலர் ராஜீவ் வர்மாவின் தாயார் உடல்நிலை சரியில்லாமல் ஜிப்மரில் அனுமதிக்கப்பட்டுள்ளதால், கூட்டத்திற்கு தலைமை செயலர் (பொறுப்பு) ராஜூ தலைமை வகித்தார். ஆட்சியர் வல்லவன், காவல், கல்வித்துறை, தீயணைப்பு துறை,வருவாய் துறை, சுகாதார துறை உட்பட பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்றனர். புதுச்சேரிக்கு தேசிய பேரிடர் மீட்பு குழுவை வரவழைப்பது, மின்துறை, பொதுப்பணித் துறை, வருவாய் துறை, தீயணைப்பு துறையை தயார் நிலையில் வைப்பது, 24 மணி நேரமும் இயங்கக்கூடிய கட்டுப்பாட்டு அறை அமைப்பது, 167 பாதுகாப்பு மையங்கள் அமைப்பது என பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.
கூட்டத்துக்கு பிறகு ஆட்சியர் வல்லவன் கூறியது: “புதுச்சேரியில் இரு தினங்களுக்கு கனமழை பொழிய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை எதிர்கொள்ள அனைத்து துறைகளுடன் ஆய்வுக்கூட்டம் நடத்தினோம். புதுச்சேரிக்கு 3 பேரிடர் மீட்பு குழு வருகிறது. இதில் 2 குழு புதுச்சேரியிலும், ஒரு குழு காரைக்காலிலும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர். மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லக் கூடாது என்று அறிவுறுத்தியுள்ளோம். மீன்பிடிக்கச் சென்ற 454 விசைப்படகுகள் உட்பட 2353 படகுகள் கரைசேர்ந்து விட்டன. புதுச்சேரி மாவட்டத்தில் 163 தங்குமிடங்கள் திறக்கப்பட்டுள்ளன. 24 மணி நேரமும் செயல்படக்கூடிய கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. இலவச தொலைபேசி எண்கள் 1070, 1077 முழுவதும் செயல்படும்.
முக்கியமான துறைகளிலும் கட்டுப்பாட்டு அறைகள் திறந்துள்ளன. அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் மருத்துவர்கள், மருந்துடன் 24 மணி நேரமும் செயல்படும். குடிநீர் தொட்டிகளும் பரிசோதிக்கப்பட்டுள்ளது. கனமழையில் தடையற்ற குடிநீர் வசதி செய்ய ஜெனரேட்டர் வசதியும் தயாராக உள்ளது. கனமழையால் நீர் தேங்கும் இடங்களில் நடவடிக்கை எடுத்துள்ளோம். இதை மீறி நீர் தேங்கினால் வெளியேற்ற ஜெனரேட்டர், ஜேசிபி தயாராக உள்ளன. சாலைகளில் மரங்கள் விழுந்தால் அகற்ற ஒருங்கிணைப்பு குழு அமைத்துள்ளோம். மின் கம்பி, கம்பம் விழுந்தால் உடன் சரி செய்ய குழு தயாராக உள்ளன. அடுத்த மூன்று நாட்களில் பொழியும் கனமழையை எதிர்கொள்ள தயாராக அரசு உள்ளது” என்று ஆட்சியர் கூறினார்.