கீவ்: உக்ரைன் தலைநகர் கீவ் நகரில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் அந்நாட்டு உள்துறை அமைச்சர் டெனிஸ் மொனாஸ்டிரிஸ்கி, மூத்த அதிகாரிகள் உள்பட 16 பேர் உயிரிழந்தனர். இதனை அம்மாகாண ஆளுநர், தேசிய காவல் துறை தலைவர் ஐகர் க்ளைமென்கோ ஆகியோர் உறுதி செய்துள்ளனர்.

இது குறித்து ஆளுநர் கூறுகையில், “கீவ் நகரின் ப்ரோவாரி என்ற பகுதியில் ஒரு குடியிருப்புக்கு அருகே ஹெலிகாப்டர் ஒன்று விழுந்து நொறுங்கியது. இதில் அருகிலிருந்த மழலையர் பள்ளியைச் சேர்ந்த 2 குழந்தைகள் உள்பட 10 பேர் இறந்தனர்” என்றார்.

இந்தச் சமப்வத்திற்குப் பின்னர் சமூகவலைதளங்களில் வெளியான வீடியோவில் விபத்துப் பகுதியிலிருந்து அபயக் குரல் ஒலிப்பதைக் கேட்க முடிந்தது. சம்பவ இடத்தில் போலீஸார் தீயணைப்பு வீரர்கள் குவிந்துள்ளனர். விபத்து பகுதியில் மீட்புப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

உக்ரைன் மீது கடந்த ஆண்டு பிப்ரவரி 24-ஆம் தேதி ரஷ்யா போர் தொடுத்தது. ஓராண்டு நெருங்கவுள்ள நிலையில் இன்னும் அங்கு யுத்தம் ஓயவில்லை. இந்நிலையில், இன்று ஹெலிகாப்டர் விபத்தில் அந்நாட்டு உள்துறை அமைச்சர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்திற்கான காரணம் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. இருப்பினும் கடுமையான மூடுபனி காரணமாக விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.