வானிலை சீராக இல்லாத சூழலில், முப்படைகளின் தலைமைத் தளபதி ஹெலிகாப்டர் பயணத்தை தவிர்த்திருக்கலாம் என ஓய்வு பெற்ற விமானப்படை அதிகாரி தெரிவித்தார்.
கோவையைச் சேர்ந்த இந்திய விமானப்படையின் ஓய்வு பெற்ற பைலட்டும், பாதுகாப்பு வல்லு நருமான மோகன் ரங்கநாதன் ‘இந்து தமிழ்திசை’ செய்தியாளரிடம் நேற்று கூறியதாவது:
குன்னூரில் கடந்த 10 நாட்களுக்கு மேலாகவே, வானிலை சீராக இல்லை என்பது ராணுவத்தினருக்கு தெரிந்திருக் கும். முப்படை தலைமைத் தளபதி வருவதால், போலீஸாரும் தரைவழியாக செல்வதற்கு ஏற்ப பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்தியிருந்தனர்.
வானிலை சீராக இல்லாத சூழலில், ஹெலிகாப்டர் பயணத்தை தவிர்த்து, சாலை வழியாக சென்றிருக்க வேண்டும். ஆனால், ஹெலிகாப்டர் பயணத்தை ஏன் தேர்ந்தெடுத்தனர் எனத் தெரியவில்லை.
சூலூர் விமானப்படைத் தளத்தில் இருந்து, சாலை வழிப் பயணமாக சென்றிருந்தால், மதியம் 1.30 மணிக்குள் குன்னூருக்கு சென்றிருக்கலாம்.
ஆனால், விரைவாக செல்வதற் காக ஹெலிகாப்டர் பயணத்தை தேர்ந்தெடுத்திருக்கலாம்.
ஹெலிகாப்டரில் மலை, பனிமூட்டம் நிலவும் பகுதிகளில் செல்லும் போது எச்சரிக்கை வேண்டும். பொதுவாக, மலைப் பகுதிகளில் ஹெலிகாப்டரில் செல்லும் போது, இருக்கும் இடத்தில் இருந்து குறைந்தபட்சம் இரண்டரை கிலோ மீட்டர் தூரத்துக்கு வெளிப்பகுதி தெளிவாக தெரிய வேண்டும். மேகத்தில் இருந்து 500 அடிக்கு கீழ் இருக்க வேண்டும்.
இதுபோன்ற இடைவெளி இல்லையெனில் மலைப் பகுதிகளில் ஹெலிகாப்டர் பயணத்தை தவிர்க்க வேண்டும்.
மேலும், வழக்கமாக சூலூரில் இருந்து மேட்டுப்பாளையம் பகாசூரன் மலையைச் சுற்றி குன்னூருக்கு வருவர். ஆனால், விபத்து நடந்தபோது, பர்லியாறு வழியாக, காட்டேரி பள்ளத்தாக்கை கடந்து செல்ல முயன்றுள்ளனர்.
இப்பகுதியில் உயரமான மலையும், உயரமான மரங்களும் அதிகளவில் உள்ளன. காட்டேரி பள்ளத்தாக்கு பகுதி அடர்ந்த வனப்பகுதி என்பதால் மரம் இருப்பது தெரியாது.
அடர்ந்த பனி மூட்டத்துக்குள் ஹெலிகாப்டர் செல்லும் போது, எதிரே இருப்பது ஒன்றும் தெரியாது. மலை அருகே சென்றால் மேகம் இருக்கக்கூடாது, மேகம் அருகே சென்றால் மலை இருக்கக் கூடாது என்ற விதி உள்ளது. ஆனால், விபத்து நடந்த இடத்தில் மலையும் இருந்துள்ளது, மேகமும் இருந்துள்ளது. ஏன் சென்றனர் எனத் தெரியவில்லை. தாழ்வாக சென்றாலும், உடனடியாக மேல் நோக்கி ஹெலிகாப்டரை இயக்கி விட முடியும். தாழ்வாக பயணிப்பது ஆபத்து தான்.
தாழ்வாக இருந்தாலும், ஹெலிகாப்டர் மேலே ஏற ஏற மேகமும், பனியும் இருந்துள்ள தால் ஒன்றும் செய்ய முடிய வில்லை. அந்த சமயத்தில் நிலவிய பனி மூட்டத்தால் எங்கு ஏறுகிறோம் என்று தெரியாமல் போயிருக்கலாம்.
கட்டுப்பாட்டு அறைக்கும், விமானத்துக்கும் இடையேயான தகவல் தொடர்பு எந்த இடையூறும் இல்லாவிட்டால் தொடர்ந்து இருக்கும். ஆனால், விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரில் பர்லியாறு அருகே தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது.
மலைகளுக்குள் நுழைந்ததால், தகவல் தொடர்பு சாதனங்களின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. மரங்களின் மீது வேகமாக மோதி ஹெலிகாப்டர் விழுந்துள்ளது.
எரிபொருள், மரம், தழைகள் போன்றவற்றின் காரணமாக வெடித்தவுடன் தீ வேகமாக பரவியுள்ளது.
இவ்வாறு மோகன் ரங்கநாதன் கூறினார்.