அரக்கோணம் ஐ.என்.எஸ் ராஜாளி கடற்படை விமான தளத்தில் நடைபெற்ற ஹெலிகாப்டர் விமானி பயிற்சி நிறைவு விழாவில் சிறப்பிடம் பிடித்தவர்களுக்கு ரியர் அட்மிரல் பிலிப்போஸ் ஜி.பைனமோட்டில் பரிசு வழங்கி பாராட்டினார்.

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ஐ.என்.எஸ் ராஜாளி கடற்படை விமான தளத்தில் 97-வது பிரிவு ஹெலிகாப்டர் விமானி பயிற்சி நிறைவு விழா நேற்று நடைபெற்றது. தேர்வு செய்யப்பட்ட 20வீரர்கள் கடந்த 22 வாரங்கள் பயிற்சியை நிறைவு செய்துள்ளனர். பயிற்சி நிறைவு விழாவுக்கு கோவாபிராந்திய கடற்படை தலைமை தளபதியும் கடற்படை விமான பிரிவின் தலைமை அதிகாரியுமான ரியர் அட்மிரல் பிலிப்போஸ் ஜி.பைனமோட்டில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

பயிற்சி வீரர்களின் அணிவகுப்புமரியாதையை அவர் ஏற்றுக்கொண்டார். ஹெலிகாப்டர் விமானிபயிற்சியில் ஒட்டுமொத்த பிரிவில்சிறப்பிடம் பிடித்த லெப்டினென்ட் வருண் சிங்குக்கு கிழக்கு பிராந்திய கடற்படை தளபதியின் சுழற்கோப்பையை சிறப்பு விருந்தினர் வழங்கினார்.

களப் பயிற்சியுடன் சிறப்பான பயிற்சிக்கான கேரள ஆளுநரின் சுழற்கோப்பை மற்றும்சப் லெப்டினென்ட் குன்டோ நினைவு புத்தகப் பரிசு, ஒட்டுமொத்த பயிற்சியில் வெண்கலப் பதக்கத்துடன் வீரவாளையும் லெப்டினென்ட் அமித் சங்க்வான் பரிசாக பெற்றார். மேலும், தொழில்நுட்ப பயிற்சியில் அட்மிரல் ராம்தாஸ் கட்டாரி கோப்பையுடன் வெள்ளிப்பதக்கத்தையும் அமித் சங்க்வான் பெற்றார்.

தொழில்நுட்ப பயிற்சி பிரிவில் லெப்டினென்ட் அன்மோல் அக்ரஹரி கோப்பையை பெற்றார். பயிற்சியை நிறைவு செய்த ஹெலிகாப்டர் விமானிகள், இந்திய கடற்படையின் முக்கிய பிரிவுகளில்விரைவில் பணியமர்த்தப்பட உள்ளனர் என்பது குறிப்பிடத் தக்கது.