தமிழகம் முழுவதும் ரூ.2 ஆயிரம் கோடி மதிப்புள்ள வக்பு வாரிய சொத்துகளுக்கு தடையில்லா சான்று வழங்கி மோசடி நடந்துள்ளதாக தொடரப்பட்ட வழக்கில், இதுதொடர்பாக தமிழக அரசு 6 வாரங்களுக்குள் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வக்பு வாரிய பாதுகாப்புக் குழு அறக்கட்டளை தலைவரான மதுரை கட்ராபாளையம் எம்.அஜ்மல்கான், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில் கூறியிருந்ததாவது:
மத ரீதியிலான இறை பணிகளுக்காகவும், இஸ்லாம் மதத்தைச் சேர்ந்த ஏழை, எளிய மக்களுக்கு உதவும் நோக்கிலும் வக்பு வாரியம் சட்டரீதியாக உருவாக்கப்பட்டு, பல கோடி ரூபாய் மதிப்பிலான அசையும் மற்றும் அசையா சொத்துகள் கொடையாக பெறப்பட்டு நிர்வகிக்கப்பட்டு வருகிறது.

வக்பு வாரிய சொத்துகள் குறித்து அவ்வப்போது ஆய்வு மேற்கொண்டு அவற்றை முறையாக பராமரிப்பதும், கணக்கு மற்றும் ஆவண விவரங்களை நிர்வகிப்பதும், முத்தவல்லிகளிடம் இருந்து தேவையான விவரங்களை கேட்டுப் பெறுவதும் வக்பு வாரிய தலைமை செயல் அதிகாரிகளின் முக்கிய பணியாகும்.

ஒருவேளை ஆய்வின்போது முறைகேடுகள் நடந்திருப்பது கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்டவர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் பிறப்பித்து இழப்பை வசூலிக்கவோ, சொத்துகளை மீட்கவோ தலைமை செயல் அதிகாரிக்கு அதிகாரம் உள்ளது.

ஆனால், வக்பு வாரியத்தில் கண்காணிப்பாளராக பணிபுரியும் அன்வர்தீன், முன்பு வக்பு வாரியத்தில் தலைமை செயல் அதிகாரியாக பணிபுரிந்து தற்போது ஆதிதிராவிடர் நலத்துறையில் பணிபுரியும் முகமது அஸ்லம், ஓய்வுபெற்ற முதன்மை செயல் அதிகாரி ரசீத்அலி, வக்பு வாரிய கண்காணிப்பாளர் லியாகத் அலி, ஓய்வு பெற்ற கண்காணிப்பாளர் நூருல்லா, இளநிலை உதவியாளர் முகமது ஆலிம் ஆகியோர் பல்வேறு காலகட்டங்களில் வக்பு வாரிய உறுப்பினர்கள் மற்றும் இதர ஊழியர்களுடன் கூட்டணி அமைத்து ரூ.2 ஆயிரம் கோடி மதிப்பிலான வக்பு வாரிய சொத்துகளுக்கு தடையில்லா சான்றிதழ் வழங்கி தனிநபர்களுக்கு விற்பனை செய்ய உடந்தையாக செயல்பட்டுள்ளனர்.

இதில் சிலர் இடைநீக்கமும் செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து வக்பு வாரிய சொத்துகளை மீட்கக்கோரி தமிழக அரசின்பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையின நலத் துறை முதன்மைச் செயலர், தற்போது உள்ள வக்பு வாரிய தலைமை செயல் அதிகாரி மற்றும் லஞ்ச ஒழிப்பு போலீஸில் புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.

ரூ.2 ஆயிரம் கோடி மதிப்புள்ள வக்பு வாரிய சொத்துகளை முறைகேடாக தனிநபர்களுக்கு விற்பனை செய்ய உடந்தையாக இருந்த அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கஉத்தரவிட வேண்டும். இவ்வாறுமனுவில் கோரியிருந்தார்.

நீதிபதி ஆர்.மகாதேவன் முன்புஇந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் தரப்பில்வழக்கறிஞர் எஸ்.என்.கிருபானந்தம் ஆஜராகி வாதிட்டார்.

இதையடுத்து நீதிபதி, ‘‘தமிழக அரசு 6 வாரங்களுக்குள் மனுதாரரின் மனு தொடர்பாக பரிசீலித்து, தகுந்த விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்துள்ளார்.