3 வயது சிறுவன் கொலை வழக்கில் பெண்ணுக்கு மாவட்ட அமர்வு நீதிமன்றம் வழங்கிய ஆயுள் தண்டனையை உயர் நீதிமன்றம் உறுதி செய்து உத்தரவிட்டது.

திருச்சி பாலக்கரை துரைசாமிபுரத்தைச் சேர்ந்தவர் சிவக்குமார். செல்போன் ரீசார்ஜ் கடை வைத்திருந்தார். இவரது மனைவி லெட்சுமிபிரபா கடையை கவனித்து வந்தார். இந்த கடையில் துரைச்சாமிபுரத்தைச் சேர்ந்த ரோஸ்லின் பாக்கியராணி என்பவர் பணிபுரிந்தார். கடையில் இருந்து பணத்தை திருடியதால், ரோஸ்லினை வேலைக்கு வர வேண்டாம் என லெட்சுமிபிரபா கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ரோஸ்லின், லெட்சுமிபிரபாவை பழிவாங்க திட்டமிட்டார். 16.7.2016-ல் பள்ளியில் இருந்து வீட்டுக்கு வந்த லெட்சுமிபிரபாவின் 3 வயது மகன் சிரீஸை கத்தியால் குத்தி ரோஸ்லின் கொலை செய்தார்.

இந்த வழக்கை விசாரித்த திருச்சி முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றம் ரோஸ்லின் பாக்கியராணிக்கு ஆயுள் தண்டனையும், ரூ.4 ஆயிரம் அபராதமும் விதித்து 2019-ல் தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து அவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், என்.சதீஷ்குமார் ஆகியோர் விசாரித்தனர். பின்னர், ரோஸ்லின் பாக்கியராணிக்கு வழங்கப்பட்ட ஆயுள் தண்டனையை உறுதி செய்து உத்தரவிட்டனர்.