தூத்துக்குடி அருகே சொத்திற்கு ஆசைப்பட்டு கூலித்தொழிலாளியை அவரது மனைவி மற்றும் பிள்ளைகளே கொடூரமாக கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள அமுதுண்ணாக்குடியை சேர்ந்தவர் மகாராஜன்.

65 வயதான மகாராஜன் கூலித்தொழிலாளியாக இருந்து வந்தார், இவரது மனைவி முருகம்மாள். இவர்களுக்கு பெனிஸ்கர் என்ற மகன் மற்றும் 3 மகள்கள் உள்ளனர். இதில் ஒரு மகளுக்கு திருமணமாகிய நிலையில் மகன் சென்னையில் வேலை பார்த்து வந்துள்ளார். மற்ற இரு மகள்களும் பெற்றோருடன் வீட்டில் இருந்து வந்துள்ளனர். சம்பவத்தன்று வீட்டில் தூங்க சென்ற மகாராஜன் காலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

சடலத்தை மீட்டு போலீசார் விசாரணை நடத்தியபோது அவரது கழுத்தில் நகக்கீறல்கள் இருக்கவே சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தினர். சடலத்தை மருத்துவமனைக்கு கொண்டு சென்று பரிசோதனை செய்தபோது மகாராஜன் கழுத்தை நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதன்பேரில் வீட்டில் இருந்தவர்களை போலீசார் விசாரணை வலையத்திற்குள் கொண்டுவந்தனர்.

அப்போது மகன் பெனிஸ்கரை விசாரித்தபோது நடந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது. சென்னையில் உள்ள ஒரு கடையில் பெனிஸ்கர் வேலை பார்த்து வந்த நிலையில் சொந்த ஊருக்கு வந்துள்ளார். அப்போது அங்கேயே தொழில் நடத்த திட்டமிட்ட அவர் அதற்காக தந்தையிடம் பணம் கேட்டுள்ளார். ஆனால் அவர் பணம் தர மறுத்ததாக தெரிகிறது.

அதே நேரம் மனைவி முருகம்மாள் மீது சந்தேகப்பட்டு மகாராஜன் தாக்கி வந்ததால் குடும்பமே அவர் மீது கோபத்தில் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் அவரை தீர்த்துக்கட்ட ஒட்டுமொத்த குடும்பமும் திட்டம் தீட்டியுள்ளது.

சம்பவத்தன்று தூங்கிக்கொண்டிருந்த மகாராஜனை மனைவி முருகம்மாள், மகன் பெனிஸ்கர், மகள்இசக்கி ரேவதி என மூன்று பெறும் ஒன்று சேர்ந்து கயிற்றால் கழுத்தை இறுக்கி கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்தனர். இதையடுத்து சந்தேக மரணம் என்பதை கொலை வழக்காக மாற்றிய போலீசார் மூவரையும் கைது செய்தனர்.