டெல்லியில் ஐக்கிய ஜனதா தள கட்சித் தலைவர் நிதிஷ் குமாரும், காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவர்களும் இன்று சந்தித்துக் கொண்டனர். இதில் ராகுல் காந்தி, காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பிஹார் முதல்வரும் ஐக்கிய ஜனதா தள கட்சியின் தலைவருமான நிதிஷ் குமார், பிஹார் துணை முதல்வரும் ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சியின் சேர்மன் தேஜஸ்வி யாதவ், ஐக்கிய ஜனதா தள தலைவர் ராஜீவ் ரஞ்சன் சிங், ஆர்ஜேடி ராஜ்யசபா எம்.பி. மனோஜ் குமார் ஜா மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர் சல்மான் குர்ஷித் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதையடுத்து, ஊடகங்களுக்குப் பேட்டியளித்த கார்கே, “வரவிருக்கும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒருங்கிணைக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான வரலாற்று சிறப்புமிக்க முதல் அடி இது. இது ஆரம்பமே. இது தேசத்திற்கான எதிர்க்கட்சிகளின் பார்வையை கட்டமைக்கும்” என்றார்.

பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் கூறுகையில், “டெல்லிக்கு வந்ததே எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சிதான். எவ்வளவு கட்சிகளை ஒருங்கிணைத்து வேலை செய்ய முடியுமோ அதனை சாத்தியப்படுத்துவோம்” என்றார். முன்னதாக நிதிஷ் குமார், ஆர்ஜேடி தலைவர் லாலுவை அவரது இல்லத்திற்கே சென்று சந்தித்து வந்தார்.

2024 நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் சூழலில் எதிர்க்கட்சிகள் ஒரே அணியில் இணைவதில் ஆர்வம் காட்டி வருகின்றன. சில கட்சிகள் தன்முனைப்பாக பேச்சுவார்த்தையை முன்னெடுக்க சில கட்சிகள் விலகி நிற்கின்றன. திரிணமூல் காங்கிரஸ் கட்சி நாடாளுமன்றத் தேர்தலை தனியாகவே சந்திக்கும் என்று கூறியுள்ளது. ஆனால் ராகுல் காந்தி தகுதியிழப்பு சம்பவத்திற்குப் பின்னர் திரிணமூல் தனது நிலைப்பாட்டை சற்றே தளர்த்தியிருந்தாலும் கூட அது ஆதரவாக மாறுமா என்பதைப் பொருத்திருந்தே பார்க்க வேண்டும்.

 

 

அதேபோல், தெலங்கானாவின் பாரத் ராஷ்டிர சமிதி கட்சி எதிர்க்கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளது. ஆனால், அதன் தலைவர் டி.சந்திரசேகர ராவ் அந்த அணியில் காங்கிரஸ் கட்சி இடம்பெற விரும்பவில்லை என்பதை வெளிப்படையாகவே பலமுறை கூறிவிட்டார்.

சோனியா காந்தியின் நிலைப்பாடு: ஒருமித்த கருத்துடைய கட்சிகளுடன் கூட்டணி அமைக்க காங்கிரஸ் தயாராக இருக்கிறது என்று அந்தக் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார். இது குறித்து ‘தி இந்து’ ஆங்கில நாளிதழின் தலையங்க பக்கத்தில் அவரது கட்டுரை நேற்று வெளியானது. அதில், “ஜனநாயகத்தின் தூண்களான நாடாளுமன்றம், சட்டப்பேரவை, அரசு நிர்வாகம், நீதித் துறையை மத்திய அரசு திட்டமிட்டு சீர்குலைத்து வருகிறது. இதன்மூலம் இந்தியாவின் ஜனநாயகம் கேள்விக்குறியாகி வருகிறது.

கடந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் வேலைவாய்ப்பின்மை, பணவீக்கம், பிரிவினைவாதம், பட்ஜெட், அதானி குழும ஊழல் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து கேள்விகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டிருந்தன. இதை தடுக்க நாடாளுமன்ற கூட்டத் தொடர் முற்றிலுமாக முடக்கப்பட்டது. எதிர்க்கட்சிகளை குறிவைத்து சிபிஐ உள்ளிட்ட மத்திய புலனாய்வுஅமைப்புகள் ஏவி விடப்படுகின்றன. எதிர்க்கட்சிகளில் இருந்து ஆளும்பாஜகவுக்கு தாவும் நபர்கள் மீது மட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படுவது இல்லை. செய்தியாளர்கள், சமூக ஆர்வலர்கள் மீதுதேசிய பாதுகாப்பு சட்டங்களின்கீழ் வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன.

வெளிநாட்டுக்கு தப்பியோடிய பொருளாதார குற்றவாளி மெகுல்சோக்சி மீதான நோட்டீஸை இன்டர்போல் வாபஸ் பெற்றிருக்கிறது. ஓய்வு பெற்ற நீதிபதிகளை தேசவிரோதிகள் என்று மத்திய சட்ட அமைச்சர் முத்திரை குத்துகிறார். ஊடகங்களின் குரல் வளையை நெரிக்க தகவல் தொழில்நுட்ப சட்டங்களில் திருத்தங்கள் செய்யப்பட்டு உள்ளன.

வேலைவாய்ப்பின்மை, பணவீக்கம் குறித்து மத்திய பட்ஜெட்டில் நிதியமைச்சர் எதுவுமே குறிப்பிடவில்லை. இந்தியாவில் இந்த பிரச்சினைகளே இல்லை என்ற வகையில் மத்திய அரசு செயல்படுகிறது. ஆனால் பால், காய்கறிகள், முட்டை, சமையல் எண்ணெய், சமையல் காஸ் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை கணிசமாகஉயர்ந்து வருகிறது. பெரும் எண்ணிக்கையிலான இளைஞர்கள் வேலையில்லாமல் தவிக்கின்றனர். 2022-ம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருவாய் இரட்டிப்பாகும்என்று அளிக்கப்பட்ட வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. மத விழாக்களை பயன்படுத்தி கலவரங்கள் நடத்தப்படுகின்றன. ஆனால் பிரதமர் நரேந்திர மோடி மவுனம் காக்கிறார். சீனாவுடனான எல்லைப் பிரச்சினை குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த மத்திய அரசு மறுத்து வருகிறது.

அடுத்த சில மாதங்கள் ஜனநாயகத்துக்கு சோதனையான காலமாக இருக்கும். பல்வேறு மாநிலங்களில் நரேந்திர மோடி அரசு தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்யக்கூடும். நாட்டின் அனைத்து பிரச்சினைகளையும் மக்கள் மன்றத்துக்கு காங்கிரஸ் கொண்டு செல்லும். இந்திய அரசமைப்பு, மக்களின் குரலை காக்க காங்கிரஸ் தொடர்ந்து போரிடும். பிரதான எதிர்க்கட்சி என்ற பொறுப்புணர்வு எங்களுக்கு இருக்கிறது. அந்த வகையில் ஜனநாயகத்தை காப்பாற்ற ஒத்த கருத்துடைய கட்சிகளுடன் கூட்டணி அமைக்க காங்கிரஸ் தயாராக உள்ளது” என்று சோனியா காந்தி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.