கராச்சியில் நடைபெற்ற 3வது டெஸ்ட் போட்டியிலும் இங்கிலாந்திடம் பாகிஸ்தான் அணி தோல்வியை தழுவியது. இதையடுத்து, பாகிஸ்தானை அதன் சொந்த மண்ணில் 3-0 என்ற கணக்கில் தோற்கடித்து டெஸ்ட் தொடரை கைப்பற்றியுள்ளது ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்த அணி.

பாகிஸ்தான் – இங்கிலாந்து இடையேயான மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்து ஏற்கனவே வெற்றி பெற்றிருந்தது. இந்நிலையில், மூன்றாவது டெஸ்ட் போட்டி கராச்சியில் நடைபெற்றது. இதில், முதல் இன்னிங்சில் பாகிஸ்தான் அணி 304 ரன்களை எடுக்க, இங்கிலாந்து அணி 354 ரன்களை எடுத்திருந்தது. 2-வது இன்னிங்சில் பாகிஸ்தான் 216 ரன்களுக்குச் சுருண்டது. இந்த போட்டியில், 18-வயதே நிரம்பிய இங்கிலாந்தின் ரேஹான் அகமது என்ற லெக் ஸ்பின்னர் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி மிகக்குறைந்த வயதில் அறிமுகப் போட்டியில் 5 விக்கெட்டுகளை எடுத்த வீரர் என்ற சாதனையைப் படைத்தார்.

167 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று களமிறங்கிய இங்கிலாந்து, பழைய பாணியில் நிதானித்து ஆடுவதெல்லாம் கிடையாது, முழுதும் சாத்துப்படிதான் என்று இறங்கியது. நேற்றே 17 ஓவர்களில் 112/2 என்று அதிவேக ரன் குவிப்பில் ஈடுபட்ட அந்த அணி, இன்று காலை வந்தவுடன் பென் ஸ்டோக்ஸ், பென் டக்கெட் அவசரம் காட்டி இலக்கை எட்டி 3-0 என ஒயிட் வாஷை நிறைவு செய்தனர்.

நேற்று தொடக்க வீரர் ஜாக் கிராலி 41 பந்துகளில் 7 பவுண்டரிகளுடன் 41 ரன்கள் விளாசி லெக் ஸ்பின்னர் அப்ரார் அகமதுவிடம் எல்.பி.ஆகி வெளியேறினார். இதையடுத்து ரேஹன் அகமதுவை இறக்கியது இங்கிலாந்து. அவர் வந்தவுடனேயே இறங்கி வந்து சிக்சர் விளாசி ‘பாஸ்பால்’ அணுகுமுறைக்குள் தானும் இருப்பதை வெளிப்படுத்தினார். 2 பவுண்டரிகளுடன் 8 பந்தில் 10 ரன்கள் எடுத்த ரேஹன் அகமது அதிக நேரம் நீடிக்கவில்லை. அப்ரார் பந்தில் பவுல்டு ஆகி வெளியேறினார்.

இன்று பென் ஸ்டோக்ஸ், பென் டக்கெட் வெற்றியை நிறைவு செய்தனர். பென் ஸ்டோக்ஸ் தன் கேப்டன்சியில் கடைசி 10 டெஸ்ட் போட்டிகளில் 9-ல் வெற்றி பெற்றுள்ளார். இவர், ஸ்டீவ் வாஹ்-ன் தொடர் டெஸ்ட் வெற்றி சாதனையை எட்டிப் பிடிக்கும் நோக்கில் பயணித்து வருகிறார். அடுத்த ஆஷஸ் தொடரில் இந்த பிரெண்டன் மெக்கல்லம் / பென் ஸ்டோக்ஸ் அதிரடி முறைக்கு ஆஸ்திரேலியா செக் வைத்தால்தான் உண்டு.

பென் ஸ்டோக்ஸ் கேப்டனாவதற்கு முன்பாக 17 டெஸ்ட் போட்டிகளில் 1-ல் மட்டுமே இங்கிலாந்து வென்றிருந்தது. ஸ்டோக்ஸ் / மெக்கல்லம் கூட்டணி இங்கிலாந்து கிரிக்கெட் அணுகுமுறையில் சட்டக மாற்றத்தை, சிந்தனை மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. அதோடு, ஒட்டுமொத்தமாக டெஸ்ட் கிரிக்கெட் ஆட்டத்தின் போக்கையும் அது மற்றி வருவதால், பிற அணிகள் தங்களை மறுபரிசீலனை செய்துகொள்ள வேண்டிய நிர்பந்தத்தில் உள்ளன.

இங்கிலாந்தின் இந்த புதிய அணுகுமுறைக்கு ‘Bazball’ என்று கிரிக்கெட் உலகில் செல்லப்பெயர் இடப்பட்டுள்ளது. அதாவது பிரெண்டன் மெக்கல்லமின் செல்லப்பெயர் ‘Baz’ ஆகும். இந்த புதிய அணுகுமுறையின் முதல் களபலியாக நியூசிலாந்து 3-0 என்று உதை வாங்கியது. அடுத்தபடியாக இந்தியா 378 ரன்களை 4வது இன்னிங்ஸில் விரைவு கதியில் இங்கிலாந்தை அடிக்க விட்டது. பிறகு தென் ஆப்பிரிக்காவுக்கு 2-1 என்று இதே பாஸ்பால் காட்டடி தர்பார்தான் நடந்தது. இப்போது பாகிஸ்தான் செம்மையாக இங்கிலாந்திடம் சிக்கி சின்னாபின்னமாகியுள்ளது.