ரிசர்வ் வங்கி கடனுகான வட்டி விகிதத்தை உயர்த்தியதை தொடர்ந்து நாட்டின் முன்னணி வீட்டுக்கடன் வழங்கும் நிறுவனமான எச்டிஎப்சி வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது. இதுபோலவே பஞ்சாப் நேஷனல் வங்கியும் வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது.

வங்கிகள் ரிசர்வ் வங்கியிடம் இருந்து குறுகிய கால மற்றும் நீண்டகால கடன்களை பெறுகின்றன. இந்த கடன்களுக்கு ரிசர்வ் வங்கி ஒரு குறிப்பிட்ட வட்டியை வங்கிகளிடம் பெறுகிறது. குறுகிய கால கடன்களுக்கு ரிசர்வ் வங்கி விதிக்கும் வட்டி விகிதமே ரெப்போ வட்டி விகிதம் ஆகும். 2020-ம் ஆண்டு மே 22-ம் தேதி முதலே குறுகிய கால கடன் வட்டிவிகிதம் 4%ஆக நீடித்து வந்தது. ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதம் 3.35%ஆக நீடித்து வந்தது.

இந்திய பொருளாதாரம் பணவீக்கத்தின் தாக்கத்தின் காரணமாக ஏற்கெனவே அதிகப்படியான பாதிப்புகளை எதிர்கொண்டு வருகிறது. மேலும் நாட்டின் பணவீக்கம் 3 மாதங்களாக ரிசர்வ் வங்கியின் அதிகப்படியான பணவீக்க அளவான 6 சதவீதத்தைத் தாண்டியுள்ளது.

இதனால் ரிசர்வ் வங்கி குறுகிய காலக் கடனுக்கான வட்டிவீதம் 40 அடிப்படை புள்ளிகள் (பிபிஎஸ்) உயர்த்தி 4.40 சதவீதமாக உயர்த்தப்பட்டது. இதனால் வங்கிகள் வழங்கும் தொழில் வணிகத் துறைக்கான கடன், வீட்டுக்கடன், வாகனக்கடன், நகைக்கடன், தனிநபர் கடன் உள்ளிட்ட பல்வேறு வகையான கடன்களுக்குச் செலுத்த வேண்டிய வட்டி அதிகரிக்கும் என கூறப்பட்டது.

ஐசிஐசிஐ வங்கி, பாங்க் ஆப் பரோடா மற்றும் பாங்க் ஆஃப் இந்தியா உள்ளிட்ட பல வங்கிகள் வட்டி விகிதங்களை உயர்த்தின. இந்தநிலையில் நாட்டின் முன்னணி வீட்டுக்கடன் வழங்கும் நிறுவனமான எச்டிஎப்சி நிறுவனம் பெஞ்ச்மார்க் கடன் விகிதத்தை 30 அடிப்படை புள்ளிகள் (பிபிஎஸ்) ஆக அறிவித்தது. இது ஏற்கெனவே மற்றும் புதிய கடன் வாங்குபவர்களுக்கும் பொருந்தும்.

இது மே 9-ம் தேதி முதல் எச்டிஎப்சி ஹவுசிங் ஃபைனான்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. புதிய கடன் வாங்குபவர்களுக்கான திருத்தப்பட்ட விகிதங்கள் கடன் மற்றும் கடன் தொகையைப் பொறுத்து 7 சதவீதம் முதல் 7.45 சதவீதம் வரை இருக்கும். தற்போதுள்ள வரம்பு 6.70 சதவீதம் முதல் 7.15 சதவீதம் வரை உள்ளது. தற்போதுள்ள வாடிக்கையாளர்களுக்கு கட்டணங்கள் 30 அடிப்படை புள்ளிகள் அல்லது (0.3 சதவீதம்) உயரும்.

இதுபோலவே பஞ்சாப் நேஷனல் வங்கி அடிப்படைக் கடன் விகிதத்தை 0.40 சதவீதம் முதல் 6.90 சதவீதம் வரை உயர்த்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளது. 6.50 சதவீதத்தில் இருந்து 6.90 சதவீதமாக மாற்றப்பட்டுள்ளது. இது வெள்ளியன்று, ஜூன் 1 முதல் நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய வாடிக்கையாளர்களுக்கு திருத்தப்பட்ட ஆர்எல்எல்ஆர் மே 7-ம் தேதியான இன்று முதல் அமலுக்கு வரும் என்று பஞ்சாப் நேஷனல் வங்கி தெரிவித்துள்ளது. அதுபோல 2 கோடிக்கும் குறைவான கால டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதங்களை 5.10 சதவீதத்தில் இருந்து 5.15 சதவீதமாக உயர்த்தியுள்ளது.