பொது வேலைநிறுத்தம் காரணமாக ஓசூர் – பெங்களூரு இடையே தமிழக அரசு பேருந்துகளின் இயக்கம் இன்றி பயணிகள் திண்டாடி வருகின்றனர்.

பொதுத்துறை ஊழியர் சங்கங்களின் சார்பில் இன்றும், நாளையும் அறிவிக்கப்பட்டுள்ள இரண்டு நாள் அகில இந்திய பொது வேலைநிறுத்தம் எதிரொலியாக தமிழகம் – கர்நாடக இருமாநிலங்கள் இடையே இன்று அதிகாலை 6 மணி முதல் மிகவும் குறைந்த எண்ணிக்கையிலான தமிழக அரசு பேருந்துகளே இயக்கப்பட்டன. இதனால் ஓசூரில் இருந்து பணி நிமித்தமாகவும், கல்வி நிமித்தமாகவும், மருத்துவ சிகிச்சை நிமித்தமாவும் தினமும் பெங்களூரு செல்ல வழக்கம் போல அதிகாலையில் இருந்தே பேருந்து நிலையத்துக்கு கூட்டம் கூட்டமாக வரத்தொடங்கிய பயணிகள், தமிழக அரசு பேருந்துகள் இன்றி நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.

இந்நிலையில் ஓசூர் – பெங்களூரு இடையே கர்நாடகா அரசு பேருந்துகள், தனியார் பேருந்துகள் இடைவெளி இன்றி தொடர்ந்து இயங்கின. இந்த பேருந்துகளில் பயணிகளின் கூட்டம் அலை மோதியது. ஓசூரில் இருந்து பெங்களூரு செல்லும் பயணிகளும், பெங்களூரு நகரிலிருந்து ஓசூர் நகருக்கு வரும் பயணிகளும் தமிழக அரசு பேருந்துகள் இன்றி திண்டாடும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து ஓசூர் பேருந்து நிலைய நேரங்காப்பாளர் கூறும்போது, ”28,29 ஆகிய இருநாட்கள் பொது வேலைநிறுத்தம் காரணமாக வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்ளாத 10 சதவீதம் பணியாளர்கள் மட்டும் வேலைக்கு வந்துள்ளனர். இதனால் குறைந்த எண்ணிக்கையிலான பேருந்துகளே இயக்கப்பட்டு வருகின்றன. ஓசூர் பேருந்து நிலையத்தில் இருந்து பெங்களூரு நகருக்கு தினசரி இயக்கப்பட்டு வந்த சேலம் மண்டல பேருந்துகள் – 168, தருமபுரி மண்டல பேருந்துகள் – 140, விழுப்புரம் மண்டல பேருந்துகள் – 110 என மொத்தம் 418 விரைவு பேருந்துகளில் பொதுவேலை நிறுத்தம் காரணமாக 10 சதவீதம் பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகின்றன.

அதேபோல ஓசூர் – கர்நாடகா அத்திப்பள்ளி இடையே இருமாநில எல்லைப்பகுதியில் தினசரி இயக்கப்பட்டு வந்த 20 தமிழக அரசு நகர பேருந்துகளும், தேன்கனிக்கோட்டை, தளி, கெலமங்கலம், பாகலூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு தினசரி இயக்கப்பட்டு வந்த 70-க்கும் மேற்பட்ட கிராம சேவை பேருந்துகளும் நிறுத்தப்பட்டுள்ளது’’ என்று அவர் கூறினார்.