கரோனா, உக்ரைன் போன்ற பிரச்சினைகளுக்குப் பின்னால் எவ்வளவு காலம்தான் ஒளிந்துகொண்டிருப்பீர்கள் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு காங்கிரஸ் கேள்வி எழுப்பி உள்ளது.

புதுடெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் கவுரவ் வல்லப், பிரதமர் நரேந்திர மோடியின் மனதின் குரல் வானொலி உரையைச் சுட்டிக்காட்டி பேசினார். 2022 மிகச் சிறந்த ஆண்டாக அமைந்துள்ளதாகவும், நாட்டின் பொருளாதாரத்திற்கும் இந்த ஆண்டு சிறப்பான ஆண்டாக இருந்ததாகவும் நரேந்திர மோடி கூறியதை சுட்டிக்காட்டிய கவுரவ் வல்லப், “பட்டினி குறியீட்டில் இந்தியா 107-வது இடத்தில் உள்ளது. அதாவது, ஆப்கனிஸ்தானைவிட ஒரு இடம்தான் நாம் முன்னணியில் இருக்கிறோம்.

2022-ல் ஆசியாவிலேயே இந்திய ரூபாய் மதிப்பு மிகப் பெரிய வீழ்ச்சியை சந்தித்துள்ளது. வேலைவாய்ப்பின்மையைப் பொறுத்தவரை கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத மிக மோசமான நிலையில் நாம் இருக்கிறோம். கடந்த 10 மாதங்களில் பணவீக்கம் 6 சதவீதத்தை விட அதிகமாக உள்ளது. பால் விலை ஓராண்டில் 5 மடங்கு உயர்ந்துள்ளது. பெட்ரோல், டீசல், எரிவாயு ஆகியவற்றின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. கச்சா எண்ணெய்யின் விலை சர்வதேச சந்தையில் குறைந்தபோதும், இந்தியாவில் எரிபொருளின் விலை குறையவில்லை.

இந்திய ஏற்றுமதி தொடர்ந்து குறைந்து வருகிறது. இதன் காரணமாக வர்த்தக பற்றாக்குறை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. நிலமை இப்படி இருக்கும்போது, நாடு பொருளாதார ரீதியில் நல்ல நிலையில் இருப்பதாக பிரதமர் மோடியால் எவ்வாறு கூற முடிகிறது. இன்னும் எவ்வளவு காலத்திற்குத்தான் கரோனா, உக்ரைன் போன்ற பிரச்சினைகளுக்குப் பின்னால் நீங்கள் ஒளிந்துகொண்டிருப்பீர்கள்” என கேள்வி எழுப்பினார்.