‘உங்களுக்கு லோன் வேணுமா?’, ‘கிரெடிட் கார்டு அப்ரூவ் ஆகி இருக்கு’, ‘நிதி உதவி வேணுமா?’ என தொலைபேசி வழியே தொல்லை கொடுக்கும் பணியை டெலிமார்க்கெட்டிங் என சொல்லி வருகிறோம். இவை ஸ்பேம் அழைப்புகள் என அறியப்படுகின்றன. நம்மில் பலரும் இந்த ஸ்பேம் அழைப்புகளை அன்றாட வாழ்வில் எதிர்கொள்வது வழக்கம். முக்கியமான அழைப்பு என எண்ணி எடுத்தால், அதில் வேண்டாத இந்த டெலிமார்க்கெட்டிங் பேர் வழிகள்தான் பேசுவார்கள். ட்ரூ காலர் செயலி மூலம் இப்போது வேண்டாத சில ஸ்பேம் அழைப்புகளை எளிதில் அடையாளம் காண்கிறோம். ஆனால், அதனை நிரந்தரமாக பிளாக் செய்வது எப்படி என்பதைப் பார்ப்போம்.
சில நேரங்களில் இந்த ஸ்பேம் அழைப்புகளின் வழியே மோசடி வேலைகளும் நடக்கிறது. இந்த அழைப்புகள் அனைத்தையும் ஒரே நேரத்தில் பிளாக் செய்யலாம். இதற்கு இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் (டிராய்) தேசிய கஸ்டமர் ப்ரிஃபெரன்ஸ் ரிஜிஸ்டர் (என்சிபிஆர்) உதவுகிறது. இதன் மூலம் குறிப்பிட்ட சில பிரிவுகளின் கீழ் டெலி மார்க்கெட்டிங் கம்யூனிகேஷன் அழைப்புகளை பிளாக் செய்யலாம்.
ஸ்பேம் அழைப்புகளை பிளாக் செய்வது எப்படி?
- 1909 எனும் எண்ணிற்கு ‘START DND’ என டைப் செய்து மெசேஜ் அனுப்ப வேண்டும்.
- சம்பந்தப்பட்ட டெலிகாம் சேவை வழங்குநரிடம் இருந்து கேட்டகிரிஸ், மோடு, டைம் பேண்ட், நாட்கள் போன்ற பிரிவுகளில் பயனர்கள் ஸ்பேம் அழைப்புகளை பிளாக் செய்யும் ஆப்ஷன்கள் கிடைக்கும்.
- அதில் பயன்கள் தங்களுக்கு விருப்பமில்லாத பிரிவை தேர்வு செய்து ஸ்பேம் அழைப்புகளை பிளாக் செய்து கொள்ளலாம்.
- பயனர்கள் தரப்பில் எஸ்எம்எஸ் மூலம் உறுதி செய்த 24 மணி நேரத்தில் அது செயல்பாட்டுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இதை செய்வதால் வங்கி, ஆன்லைன் போர்டல் தரப்பில் கிடைக்கப்பெறும் எஸ்எம்எஸ் சேவைகள் பிளாக் ஆகாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல தனிப்பட்ட எண்களில் இருந்து வரும் மார்க்கெட்டிங் அழைப்புகள் பிளாக் செய்யப்படாது எனவும் தெரிகிறது.
- இது தவிர ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா பயனர்கள் நேரடியாக அந்த நிறுவனங்களின் வலைதளத்தின் மூலமாகவும் Do not disturb மோடை ஆக்டிவேட் செய்ய முடியும்.