மத்திய, மாநில அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி 100-க்கும் மேற்பட்ட இளைஞர்களிடம் ரூ.3 கோடி வரை வசூலித்து பண மோசடியில் ஈடுபட்ட பெண் உட்பட 4 பேரை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்துள்ளனர்.
சென்னை, கோட்டூர்புரத்தைச் சேர்ந்தவர் அமுதா. இவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்று அளித்திருந்தார். அதில், ‘`சென்னை நன்மங்கலத்தை சேர்ந்த ரேணுகா (48) என்பவர் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து தன்னைப் போன்று பல நபர்களிடம் பள்ளிக்கல்வித் துறை மற்றும் பல அரசு துறைகளில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.3 கோடிக்கு மேல் பணம் பெற்று போலி பணி நியமன ஆணைகளை வழங்கி மோசடி செய்துள்ளார். எனவே, ரேணுகா மற்றும் அவரது கூட்டாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என குறிப்பிட்டு இருந்தார்.
இதையடுதத்து காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவின்பேரில், மத்திய குற்றப்பிரிவில் உள்ள வேலை வாய்ப்பு மோசடி தடுப்பு பிரிவு போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.
இதில், ரேணுகா பள்ளிக்கல்வித் துறையில் உயர் அதிகாரியாக உள்ளது போன்று போலி அடையாள அட்டையை தயார் செய்து வைத்துக் கொண்டு, வேலை தேடும் அப்பாவி இளைஞர்களிடம் அரசு வேலை வாங்கித் தருவதாக சுமார் ரூ.3 கோடிக்கு மேல் பணம் பெற்று ஏமாற்றி பணமோசடி செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டனர்
பணம் கொடுத்த இளைஞர்களை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் வைத்து போலியாக மருத்துவ பரிசோதனை நடத்தியது, போலியான பணி நியமன ஆணைகள் கொடுத்து ஏமாற்றியதும் விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து ரேணுகா, அவரது கூட்டாளிகள் சைதாப்பேட்டை காந்தி, நெற்குன்றம் மோகன்ராஜ், தேனி மாவட்டம் உத்தமபாளையம் ராஜேந்திரன் ஆகிய 4 பேரை போலீஸார் கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து 100-க்கும் மேற்பட்ட போலி பணி நியமன ஆணைகள், போலியான அடையாள அட்டைகள், படித்த இளைஞர்களின் 70 அசல் கல்விச் சான்றிதழ்கள், மோசடி பணத்தில் வாங்கிய ரூ.40 லட்சம் மதிப்பிலான சொத்து ஆவணங்கள், கார், பைக், தங்க நகைகள், திருவள்ளூர் மாவட்டத்தில் செங்கல் சூளையில் முதலீடு செய்த ரூ.23 லட்சம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. மோசடி பணத்தை பெற பயன்படுத்திய 10 வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டன.