சசிகலா உறவினரான இளவரசி மருமகனுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் , சேலத்தை சேர்ந்த முன்னாள் அதிமுக நிர்வாகியான கருணாகரன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், கடந்த 2016-ம் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில், அதிமுக சார்பில் சேலத்தில் வீரபாண்டி தொகுதியில் போட்டியிடுவதற்கு எனக்கு சீட் வாங்கித் தருவதாக இளவரசியின் மருமகனான ராஜராஜன் கூறினார்.

இதற்காக அவர், என்னிடமிருந்து சுமார் 5 கோடி ரூபாய் பெற்றுக்கொண்டார். ஆனால், தேர்தலில் போட்டியிட சீட்டு வாங்கி தரவில்லை. இதனால் நான் கொடுத்த பணத்தை திரும்ப தரக்கூறினேன். அவர் கொடுக்கவில்லை. இதனால், அவர்மீது காவல் துறை இயக்குனர் அலுவலகத்தில் புகார் கொடுத்தேன்.

ஆனால் அந்த புகாரின் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே நான் அளித்த புகாரின் மீது, உரிய நடவடிக்கை எடுக்க காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி பொங்கியப்பன் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, மனுதாரர் பணம் கொடுத்ததற்கான எந்த ஆவணங்களும் முறையாக இல்லாததால் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.