நீட் தேர்வு ஓ.எம்.ஆர் விடைத்தாள் திருத்தும் முறைகேடு தொடர்பாக தனிநீதிபதியே விசாரித்து முடிவெடுக்கலாம் என்று 2 நீதிபதிகள் கொண்ட சென்னை உயர்நீதிமன்றம் அமர்வு உத்தரவிட்டுள்ளது. கடந்த 2020 ஆம் ஆண்டு நடந்த நீட் தேர்வில் திருத்தப்பட்ட ஓ.எம்.ஆர் விடைத்தாள்களை தேசிய தேர்வு முகவை வெளியிட்டது. அதில் 700- க்கு 594 மதிப்பெண்கள் பெற்றதாக முதலில் காட்டிய நிலையில் சில நாட்களுக்குப் பின் தனது மதிப்பெண்களை 248 ஆக குறைத்து மற்றொரு ஓ.எம்.ஆர் தாள் வெளியிட்டதாக கோவையை சேர்ந்த மனோஜ் என்ற மாணவர் புகார் தெரிவித்தார்.

இது தொடர்பாக ஆதாரங்களுடன் அவர் தொடுத்த வழக்கை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் விசாரித்தார். அப்போது சைபர் குற்ற வழக்குகளில் நிபுணத்துவம் பெற்ற அதிகாரிகளை நியமித்து விசாரிக்க சிபிசிஐடிக்கு கடந்த மார்ச் மாதம் நீதிபதி உத்தரவிட்டார். தனிநீதிபதியின் உத்தரவை எதிர்த்து தேசிய தேர்வு முகமை தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை நீதிபதிகள் பரேஷ் உபாத்தியா, சக்தி குமார் சிபிசிஐடி விசாரணைக்கு இடைக்கால தடை விதித்தனர்.

இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது நீட் ஓ.எம்.ஆர் விடைத்தாள் திருத்தம் முறைகேடு தொடர்பான பிரதான வழக்கை தனிநீதிபதியே விசாரித்து இறுதி முடிவு எடுக்கலாம் என்று உத்தரவிட்டு உள்ளனர். அதுவரை சிபிசிஐடி விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடை தொடரும் என்று கூறியுள்ள நீதிபதிகள் மனுதாரரான மாணவர் தொடர்ந்த மருத்துவக்கல்வி பயிலலாம் என்றும், அது வழக்கின் இறுதித் தீர்ப்புக்கு உட்பட்டது என்றும் தெரிவித்துள்ளனர்.