ஆன்லைன் வகுப்புகளில் பயிலும் தங்கள் குழந்தைகள் இதுபோன்ற சிக்கல்களில் சிக்காமல் பாதுகாக்க ஆசிரியர் மட்டுமின்றி பெற்றோரும் தொடர்ந்து கவனிக்க வேண்டும் என்று அறிவுறுத்துகின்றனர் போலீசார்.

கோவையில் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி 13 வயது சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்ததுடன், அதை வீடியோ பதிவு செய்து மிரட்டி 60 சவரன் தங்கநகைகளை பறித்துள்ளார் சாப்ட்வேர் இஞ்சினியர் ஒருவர். ஆன்லைனில் படிப்பதாக நினைத்த மகள் இன்ஸ்டாகிராமில் இளைஞர் விரித்த வலையில் சிக்கியுள்ளார்.

கோவை பீளமேடு பகுதியை சேர்ந்த தொலதிபரின் 13 வயது மகள் அதே பகுதியில் உள்ள பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வருகிறார். கொரோனா காரணமாக பள்ளிகள் மூடப்பட்டிப்பதால் ஆன்லைன் வழியாக பாடங்களை படித்து வந்தார்.

ஆன்லைன் வகுப்பிற்கு சிறுமியின் பெற்றோர் ஸ்மார்ட்போன் ஒன்றை வாங்கி கொடுத்துள்ளனர். அதில் சிறுமி பெற்றோருக்குத் தெரியாமல் இன்ஸ்டாகிராம் என்ற செயலியை பதிவிறக்கம் செய்து நண்பர்களுடன் பேசி வந்துள்ளார்.

அப்போது சிறுமிக்கு விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை சேர்ந்த 23 வயதான ஸ்ரீநாத் என்ற சாப்ட்வேர் இஞ்சினியர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. 2 பேரும் இன்ஸ்டாகிராமில் தினமும் சாட்டிங் செய்து பேசி வந்த நிலையில் சிறுமியை காதலிப்பதாக கூறி இஞ்சினியர் ஸ்ரீநாத் ஆசை வார்த்தை கூறியுள்ளார்.

பின் தங்களது செல்போன் எண்களை பரிமாறி கொண்டு இருவரும் பேசி வந்துள்ளனர். இந்நிலையில் கோவை வந்த அந்த ஸ்ரீநாத் அவ்வப்போது மாணவியை பல்வேறு இடங்களுக்கு அழைத்து சென்றுள்ளார்.

அப்போது சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்ததுடன் அதனை அவருக்கு தெரியாமல் தனது செல்போனில் வீடியோவாகவும் பதிவு செய்து வைத்துள்ளார். அதன்பிறகுதான் ஸ்ரீநாத் தனது உண்மை முகத்தை காண்பிக்க ஆரம்பித்துள்ளார்.

சிறுமியைத் தொடர்பு கொண்டு நாம் இருவரும் தனிமையில் இருந்த போது அவற்றை வீடியோ எடுத்து வைத்திருப்பதாக கூறியிருக்கிறார். அவற்றை சமூக வலைதளங்களில் வெளியிடாமல் இருக்க பணம் கொடுக்க வேண்டும் என்றும் சிறுமியை மிரட்டியுள்ளார்.

இதனால் பயந்துபோன சிறுமி வீட்டில் இருந்து பெற்றோருக்கு தெரியாமல் கொஞ்சம் கொஞ்சமாக நகையை எடுத்து  ஸ்ரீநாத்திடம் கொடுத்துள்ளார். இப்படி 60 சவரன் நகைகளை சிறுமியை மிரட்டி பறித்துள்ளார் ஸ்ரீநாத்.

ஒரு கட்டத்தில் வீட்டில் நகைகள் குறைந்து இருப்பதை பார்த்த பெற்றோர் இதுகுறித்து மாணவியிடம் விசாரித்துள்ளனர். அதற்கு மேல் மறைக்க முடியாத சிறுமி நடந்த சம்பவங்களை பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.

பதறிப்போன மாணவியின் பெற்றோர் அவரை அழைத்து கொண்டு கோவை கிழக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் கிழக்கு மகளிர் காவல் துறையினர் இளைஞர் ஸ்ரீநாத் மீது போக்சோவில் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் தனிப்படை அமைத்து தலைமறைவாக இருக்கும் ஸ்ரீநாத்தை பிடிக்க தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர்.