சேலம் மாவட்டத்தை சர்வதேச தரத்துக்கு உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என, முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்டம் ஆத்தூரில் அதிநவீன ஜவ்வரிசி ஆலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (செப். 29) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வுக்குப் பின்னர் ஜவ்வரிசி உற்பத்தியாளர்கள் மற்றும் மரவள்ளி விவசாயிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடினார்.

பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:

“கடந்த 4 மாத கால திமுக ஆட்சியில், தேர்தலின் போது அளிக்கப்பட்ட 500-க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளில், 200-க்கும் மேற்பட்டவை நிறைவேற்றி முடிக்கப்பட்டுள்ளன. மக்களின் கருத்தைக் கேட்டு, உணர்வுகளைப் புரிந்து இந்த ஆட்சி நடைபெற்று வருகிறது.

மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு, ஆட்சி நடத்தப்பட வேண்டும் என்பது இன்றைய ஆட்சியின் மிக முக்கியமான கொள்கையாக உள்ளது. இந்தியாவில் வேறு எங்கும் இல்லாத அளவில் வேளாண் துறைக்குத் தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

அதற்கு முன்னதாக, விவசாயிகள், விவசாய சங்கத்தினர் உள்படப் பல்வேறு தரப்பினரையும் மாவட்ட மாவட்டமாகச் சென்று சந்தித்து கலந்து பேசி அதற்குப் பிறகுதான் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதேபோல, ஜவ்வரிசி உற்பத்தியாளர்கள் மற்றும் மரவள்ளி விவசாயிகளின் கோரிக்கைகளைக் கேட்டு அவை நிச்சயம் நிறைவேற்றப்படும்.

ஜவ்வரிசி உற்பத்தியாளர்களுக்குப் புதிய சேமிப்புக் கிடங்கு, ஜவ்வரிசியை உணவுப் பொருளாகப் பயன்படுத்துவது தொடர்பாக பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவது போன்ற கோரிக்கைகள் நிறைவேற்றப்படுவதுடன், ஜவ்வரிசியில் கலப்படத்தைத் தடுக்க குழு அமைக்கப்படும். பொதுமக்களுக்கு நியாயமான விலையில் ஜவ்வரிசி கிடைக்க நடவடிக்கை எடுப்பது உள்ளிட்ட அனைத்துக் கோரிக்கைகளும் படிப்படியாக நிறைவேற்றப்படும்.

கடந்த 4 மாதத்தில் தமிழகத்தில் தொழில்துறை புத்துணர்வு அடைந்துள்ளது. தெற்காசிய அளவில் தொழில் தொடங்க உகந்த மாநிலமாகத் தமிழகத்தை மாற்றிடும் வகையில் புதிய தொழில் கொள்கை வெளியிடப்பட்டுள்ளது. உலக முதலீட்டாளர்கள் முதல் மாநாடு சென்னையில் நடத்தப்பட்டது.

புதிய தொழில்களை ஈர்க்கும் வகையில் உள் கட்டமைப்புகளை மேம்படுத்த ரூ.17 ஆயிரத்து 149 கோடிக்கு, 35 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், 55 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க உள்ளது.

ஏற்றுமதியில் ஏற்றம் முன்னணியில் தமிழ்நாடு என்ற இரண்டாவது முதலீட்டாளர் மாநாடு நடத்தி, ரூ 2,180 கோடியில் 25 புதிய தொழில் திட்டங்களுக்கு, புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம், 42 ஆயிரத்து 145 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

ரூ.1.93 லட்சம் கோடி ஏற்றுமதி உடன் தமிழகம் மூன்றாவது இடத்தில் உள்ளது. இதனை முதலிடத்துக்குக் கொண்டு வருவதுதான் தமிழக அரசின் இலக்கு. தமிழகத்தை முதல் இடத்துக்குக் கொண்டுசெல்லும் வகையில் ஏற்றுமதிக் கொள்கை அமைக்கப்பட்டுள்ளது.

திருப்பூர், கரூர், மதுரை கோவை உள்ளிட்ட 10 ஏற்றுமதி மையங்கள் மேம்படுத்தப்படும். நகரம் – கிராமம் வேறுபாடின்றி பெருந்தொழில் – சிறுதொழில் பேதமின்றி தொழில் கொள்கை வடிவமைக்கப்பட்டுள்ளது. அரசின் நடவடிக்கைகளுக்குத் தொழிலதிபர்கள் முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும்.

இந்தியாவிலேயே ஜவ்வரிசி உற்பத்தியில் முன்னணியில் இருக்கும் சேலம் மாவட்டத்தை சர்வதேச தரத்துக்குக் கொண்டுசெல்ல வேண்டும் என்பதே அரசின் நோக்கம். இதற்காக விவசாயிகள், விதை உற்பத்தியாளர்கள் ஆகியோரின் நடவடிக்கைகளுக்குத் தமிழக அரசு ஒத்துழைப்பு வழங்கும்”.

இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

முன்னதாக, சேலம் மாவட்டம் வாழப்பாடியில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் கருணாநிதியின் ‘வரும் முன் காப்போம்’ என்ற மருத்துவ முகாம் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 17 மருத்துவப் பிரிவுகளை உள்ளடக்கிய இத்திட்டத்தில், தமிழகத்தில் ஒரு ஆண்டில் 1,250 இடங்களில் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு மக்களுக்கு நோய் கண்டறிதல், சிகிச்சை, மருத்துவ ஆலோசனை உள்ளிட்டவை வழங்கப்பட உள்ளன.