தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நியாயமான முறையில் நடப்பதை உறுதி செய்ய வேண்டும் என, சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

ஒன்பது மாவட்ட உள்ளாட்சித் தேர்தலில் மத்திய அரசுப் பணியாளர்களைத் தேர்தல் பார்வையாளர்களாக நியமிக்க வேண்டும், மத்திய போலீஸ் படையினரைப் பாதுகாப்புக்கு அமர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளுடன் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி அளித்த மனுவைப் பரிசீலிக்க மாநிலத் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி, அதிமுக தேர்தல் பிரிவு துணைச் செயலாளர் இன்பதுரை வழக்குத் தொடர்ந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் ஆதிகேசவலு அமர்வில் இன்று (அக். 01) விசாரணைக்கு வந்தபோது, மாநிலத் தேர்தல் ஆணையம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், “மாவட்டங்களில் 20 சதவீத வாக்குச்சாவடிகளில் கண்காணிப்பு கேமரா மற்றும் இணையதள நேரலை வசதி ஏற்படுத்தப்படும். ஸ்ட்ராங் ரூம், வாக்கு எண்ணிக்கை மையங்கள் அடையாளம் காணப்பட்டுப் பொதுமக்களுக்கு அறிவிக்கப்படும். சிக்கலான, பதற்றமான வாக்குச்சாவடிகளில் மட்டும் வீடியோ பதிவு செய்யப்படும்” என்பன உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் குறித்து தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதிமுக தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண், “மாவட்டத்தில் 20 சதவீத வாக்குச்சாவடிகள் மட்டுமல்லாமல், அனைத்து வாக்குச்சாவடிகளிலும் கண்காணிப்பு கேமரா மற்றும் இணையதள நேரலை வசதி செய்ய வேண்டும். வாக்கு எண்ணிக்கை மையங்கள், ஸ்ட்ராங் ரூம்கள் குறித்த விவரங்களை அரசியல் கட்சிகளுக்கு வழங்க வேண்டும். வாக்குச்சாவடிகளில் தொடர்ந்து வீடியோ பதிவு செய்ய வேண்டும். ஸ்ட்ராங் ரூம்களுக்கு உள்ளேயும் கண்காணிப்பு கேமரா வைக்க வேண்டும். தேர்தல் பார்வையாளர்களின் விவரங்களைப் பொதுமக்களுக்குத் தெரிவிக்க வேண்டும்” எனவும் வலியுறுத்தினார்.

இதற்கு பதிலளித்த தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் சண்முக சுந்தரம், “ரகசியமாகச் செயல்படக்கூடிய தேர்தல் பார்வையாளர்களை அடையாளப்படுத்த முடியாது. வாக்கு எண்ணிக்கை மையத்திலும், ஸ்ட்ராங் ரூம்களுக்கு வெளியே கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படுவதால், உள்ளே தேவையில்லை. முடிந்த அளவு அனைத்து வாக்குச்சாவடிகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்தார்.

இதையடுத்து, அதிமுகவின் கோரிக்கையை ஏற்று நடவடிக்கை எடுப்பதாக, அரசுத் தரப்பில் ஒப்புதல் தெரிவித்ததைப் பதிவு செய்த நீதிபதிகள், இதே நடைமுறைகளைப் பின்பற்றி தேர்தல் நடத்தப்படும் என நம்பிக்கை தெரிவித்தனர்.

எந்த புகாருக்கும் இடம் தராத வகையில், அதிகாரிகள் நியாயமான தேர்தல் நடத்துவதை உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்திய நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்தனர்.