சென்னையில் வீடுகளில் பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்ந்துள்ளது.
சென்னையில் வீடுகளில் பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.900 என விற்கப்பட்டு வந்தது. தற்போது இதன் விலை, சிலிண்டருக்கு ரூ.15 உயர்ந்து ரூ. 915 என்றாகியுள்ளது
ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும் எரிவாயு சிலிண்டர் விலை மாற்றப்படுவது வழக்கம். இந்நிலையில், வணிக ரீதியிலான பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர்களின் விலை கடந்த அக்டோபர் 2 ஆம் தேதியன்று உயர்த்தப்பட்டது.
அதன்படி, 19 கிலோ எடை கொண்ட வணிக எரிவாயு சிலிண்டரின் விலை 43.50 ரூபாய் உயர்த்தப்பட்டது. சென்னையில் ஒரு வணிக பயன்பாடு எரிவாயு சிலிண்டரின் விலை 1874.5 ரூபாயாக உயர்ந்தப்பட்டது. டெல்லியில் இதன் விலை 1736.50 ரூபாயாக உயர்த்தப்பட்டது.
சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை மாதாமாதம் உயர்த்தும் முறை கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்து நடைபெற்று வருகிறது. அதன்படி பிப்ரவரி 4 ஆம் தேதி 25 ரூபாயும், பிப்ரவரி 15 ஆம் தேதி 50 ரூபாயும் உயர்த்தப்பட்டன. அதே மாதம் மீண்டும் 25 ரூபாய் உயர்த்தப்பட்டது.
பின்னர் மார்ச் மாதம் 1 ஆம் தேதி மீண்டும் 25 ரூபாய் உயர்த்தப்பட்டது. இதன் பின்னர் கடந்த ஆகஸ்ட் 17 ஆம் தேதி சமையல் எரிவாயு, 25 ரூபாய் உயர்த்தப்பட்டது. இதனால் சென்னையில் சிலிண்டர் விலை 875 ரூபாய் 50 காசாக விற்கப்பட்டது. அதன்பின் செப்டம்பர் 1 ஆம் தேதி, மேலும் 25 ரூபாய் உயர்ந்து ரூ.900 என்றளவைக் கடந்து மக்களை நெருக்கடிக்கு ஆளாக்கியது. இப்படி கடந்த ஓராண்டில் மட்டும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 285 ரூபாய் அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், தற்போது வீடுகளில் பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை இன்னும் 15 ரூபாய் உயர்ந்து, ரூ.915 என்றாகியுள்ளது. ஏற்கெனவே பெட்ரோ, டீசல் விலையேற்றத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு இது பேரிடியாக இறங்கியுள்ளது.