நாடு முழுவதும் நாளை (நவ.4) தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி, தலைவர்கள் பலரும் தீபாவளி வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள தீபாவளி வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளதாவது:

மகிழ்ச்சிகளின் திருவிழாவான தீபஒளித் திருநாளை உற்சாகமாகக் கொண்டாடும் தமிழக மக்கள் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த தீபஒளித் திருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மனிதன் ஒரு சமூக விலங்கு. மனிதர்களால் தனித்து வாழ முடியாது. மனிதர்கள் தங்களின் உறவுகள், நண்பர்களுடன் ஒன்று கூடவும், மகிழ்ச்சியடையவும் குறிப்பிட்ட கால இடைவெளியில் கொண்டாட்டங்கள் அவசியமாகும். அதற்கான வாய்ப்புகளை உருவாக்கித் தருவதற்காகத் தான் தீபஒளித் திருநாள் போன்ற கொண்டாட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அவ்வகையில் தீபஒளித் திருநாள் மகிழ்ச்சிக்கான கருவி.

தீபஒளித் திருநாளுக்கான மகிழ்ச்சி நீடிக்க வேண்டுமானால், அதற்கான அடிப்படைக் கூறுகள் அனைத்தும் வலிமையாக இருக்க வேண்டும். அதற்கு அனைத்து துறைகளிலும் தமிழகம் முன்னேற வேண்டும். கரோனாவால் பாதிக்கப்பட்ட உலகம் இப்போது தான் அந்தக் கொடிய நோயின் பிடியில் இருந்து மீண்டு கொண்டிருக்கிறது. இனிவரும் நாட்கள் மகிழ்ச்சியாக அமையும் என்பதில் ஐயமில்லை.

மக்களின் மகிழ்ச்சிக்கு வளர்ச்சி அவசியம். மகிழ்ச்சிக்கும், வளர்ச்சிக்கும் சமூகநீதி அவசியமாகும். சமூகநீதியை முடக்கி வைத்து விட்டு வளர்ச்சியையும் அடைய முடியாது; மகிழ்ச்சியையும் அனுபவிக்க முடியாது. கிரகணத்தில் ஒளியை மறைக்கும் நிழல் போன்று, இப்போது தமிழகத்தில் சமூகநீதி கிரகணம் நடந்து கொண்டிருக்கிறது.

ஒளி மட்டுமே நிலையானது; கிரகணங்கள் தற்காலிகமானவை. விரைவில் கிரகணம் மறையும்…. சமூகநீதி ஒளி பரவும். அந்த ஒளி அனைவருக்கும் நலனும், பயனும் அளிக்கும்.

தமிழ்நாட்டு மக்களுக்கு சமூக நீதி ஒளியால் கிடைக்கும் நல்லின்பம் மட்டுமின்றி, அமைதி, வளம், வளர்ச்சி, ஒற்றுமை, நல்லிணக்கம், சகோதரத்துவம், பன்முகத்தன்மை உள்ளிட்ட நல்லவை அனைத்தும் மத்தாப்பின் வண்ணங்களாய் நிறைய தீபஒளித் திருநாள் வகை செய்ய வாழ்த்துகிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

உழவும், தொழிலும் சிறக்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ்

பாமக இளைஞரணித் தலைவரும், ராமதாஸின் மகனுமான அன்புமணி ராமதாஸ் தீபாவளி வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளார். அதில் அவர், “மத்தாப்பு ஒளிகளின் விழாவான தீப ஒளித் திருநாளை தமிழ்நாட்டிலும், உலகின் பல்வேறு பகுதிகளிலும் கொண்டாடும் அனைவருக்கும் எனது உளமார்ந்த தீப ஒளி வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

கொண்டாட்டங்கள் எப்போதும் மகிழ்ச்சியானவை; அனைவராலும் விரும்பப்படுபவை. அத்தகையக் கொண்டாட்டங்களில் தீப ஒளிக்கு சிறப்பான இடம் உண்டு. தீபஒளித் திருநாள் என்றாலே மகிழ்ச்சியும், கொண்டாட்டமும் தான் நினைவுக்கு வரும். புத்தாடை அணிந்து, மத்தாப்புக் கொளுத்தி, பிற மத நண்பர்களுக்கும், அண்டை வீட்டாருக்கும் இனிப்பு வழங்கும் வழக்கம் நட்பை வலுப்படுத்துவதுடன், நல்லிணக்கத்தையும் தழைக்கச் செய்கிறது. இது தான் தீப ஒளித் திருநாளின் சிறப்பு ஆகும்.

தீப ஒளித் திருநாளில் மத்தாப்பு ஒளிகள் மட்டுமின்றி, அனைத்து வீடுகளிலும் மகிழ்ச்சியும் நிறைந்து இருக்க வேண்டும். மகிழ்ச்சி பெருக வேண்டுமானால் உழவும், தொழிலும் சிறக்க வேண்டும். கடந்த இரு ஆண்டுகளாக கரோனா என்ற கொடிய கிருமியின் கோரத்தாண்டவம் காரணமாக அனைத்துத் தரப்பு மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மக்கள் எதிர்கொண்டு வரும் இடர்ப்பாடுகள் அனைத்தும் விலகி, மகிழ்ச்சி மலையளவு உயரக்கூடிய உன்னத திருவிழாவாக தீபஒளி மாற வேண்டும்.

மக்களிடையே அன்பு, நட்பு, நல்லிணக்கம், சகோதரத்துவம் ஆகியவை மலர வேண்டும்; போட்டி, பொறாமை, பகைமை, வெறுப்பு போன்றவை விலக வேண்டும் என்று கூறி மீண்டும் ஒரு முறை வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் ” என்று குறிப்பிட்டுள்ளார்.