விடிய, விடிய கொட்டித் தீர்த்த கனமழை காரணமாக சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, அரியலூர், திருவண்ணாமலை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், நாமக்கல், கடலூர், புதுக்கோட்டை, மயிலாடுதுறை, ராணிப்பேட்டை, விழுப்புரம், திருவள்ளூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, திருவாரூர், திருச்சி, வேலூர், திருப்பத்தூர், கரூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். ராணிப்பேட்டையில் கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

4 மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யும்:

திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை ஆகிய 4 மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யும்.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையஇயக்குநர் நா.புவியரசன் வெளியிட்ட அறிக்கை:

குமரிக்கடல் பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேற்கு நோக்கி அடுத்த 24 மணி நேரத்தில்தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிக்கு நகரக் கூடும். மேலும்,இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியில் இருந்து தெற்கு ஆந்திரா வரை நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கன முதல் மிக கனமழை பெய்யும்.

விழுப்புரம், கடலூர், வேலூர், ராணிப்பேட்டை, மதுரை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, டெல்டா மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி,காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடிமின்னலுடன் கனமழையும், பிற மாவட்டங்களில் இடிமின்னலுடன் மிதமான மழையும் பெய்யும். சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.

ஒருசில பகுதிகளில் மிதமானமழையும் அவ்வப்போது கனமழையும் பெய்யும்.

3, 4-ம் தேதிகளில் கேரள கடலோரப் பகுதி, லட்சத்தீவு,தென்கிழக்கு அரபிக் கடல் பகுதியில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்திலும், 5, 6-ம் தேதிகளில் மத்திய கிழக்குஅரபிக்கடல், அதனையொட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்திலும்சூறாவளிக் காற்று வீசும். மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.