தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் இறுதியில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்குவதையடுத்து, அதை எதிர் கொள்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்கிறார். இதில், மூத்த அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, துறை சார்ந்த செயலாளர்கள் மற்றும் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர்.

கடந்த 2015ஆம் ஆண்டு நவம்பர் இறுதியில், சென்னையில் பெருமழை பெய்து மிகப்பெரிய சேதத்தை ஏற்படுத்தியது. ஒவ்வொரு ஆண்டிலும் சென்னையில் மழை காலங்களில் நீர் தேங்கிக் கிடப்பதும், வாகனப் போக்குவரத்தில் பாதிப்பது ஏற்படுவதும் தொடர்கதையாக இருந்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளில் வடகிழக்கு பருவமழை காலத்தில் ஒக்கி புயல், வர்தா புயல், கஜா புயல், போன்றவை தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் கடும் சேதத்தை ஏற்படுத்தின.

இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு, தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. சென்னையில் பல இடங்களில் மழைநீர் வடிகால் அமைப்புகளில் உள்ள அடைப்புகள் நீக்கப்பட்டு வருகின்றன. வடகிழக்கு பருவமழைக்கு முன்னதாகவே ஏரிகள், நீர்நிலைகள், நீர்வழித் தடங்கள், ஆறுகள் போன்றவற்றில் தூர்வார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கடந்த ஆண்டு அக்டோபர் இறுதியில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது. அதுபோல் இந்த ஆண்டும் தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் இறுதியில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே மாவட்ட ஆட்சியர் அனைவரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அவர்களுக்கு அரசு அறிவுரைகளை வழங்கியுள்ளது.

தமிழகத்தைப் பொறுத்தவரை வடகிழக்கு பருவமழை காலத்தில் 47 சதவீதம் மழை கிடைக்கிறது. இதில் ஒரு சொட்டு மழைநீர் கூட வீணாகாமல் சேமிக்கப்பட வேண்டும் என்றும் அதற்கான வழிமுறைகளை மாவட்ட ஆட்சியர்கள் மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் உயர் அதிகாரிகளுடன் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்மைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொள்கிறார். இந்த ஆலோசனைக் கூட்டம் இன்று காலை நடைபெறவுள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்தில், மூத்த அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, அனைத்து துறை சார்ந்த செயலாளர்கள், சென்னை மாநகராட்சி அதிகாரிகள் பங்கேற்பார்கள். இந்த கூட்டத்தில் அதிகாரிகளுக்கு பல்வேறு அறிவுரைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கவுள்ளார்.