தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் அடுத்த ராசிமணல் பகுதியில் காவிரியாற்றின் குறுக்கே புதிய அணை கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.

தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இன்று தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரியாற்றில் நீர்வரத்து நிலவரம் குறித்தும், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களுக்குக் குடிநீர் வழங்கும் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டச் செயல்பாடுகள் குறித்தும் ஆய்வு நடத்தினார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

”காவிரியாற்றின் குறுக்கே மேகேதாட்டு, ராசிமணல் உள்ளிட்ட இடங்களில் அணைகள் கட்டுவது தொடர்பான முயற்சி நீண்ட நாட்களாகவே இருந்து வருகிறது. இந்த அணைகளைக் கட்டுவதில் சில பிரச்சினைகளும் உள்ளன. அந்தத் தடைகளைக் களைந்து தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் அடுத்த ராசிமணல் பகுதியில், காவிரியாற்றின் குறுக்கே அணை கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேகேதாட்டு பகுதியில் அணை கட்டும் முயற்சி தொடர்பாக நீதிமன்றத்தில் தங்களுக்குச் சாதகமான தீர்ப்பு வரும் எனக் கர்நாடக மாநில அரசு கூறுகிறது.

ஒரு பிரச்சினை தொடர்பாக நீதிமன்றம் செல்பவர்கள் தங்களுக்குச் சாதகமான தீர்ப்பு கிடைக்கும் என்றே நம்புவர். அந்தக் கருத்தையே வெளிப்படுத்துவர். அவர்கள் பாணியிலேயே நானும் சொல்கிறேன். மேகேதாட்டு அணை விவகாரம் தொடர்பாக தமிழகத்துக்குச் சாதகமாகவே தீர்ப்பு வரும். காவிரி- குண்டாறு இணைப்புத் திட்டம் தொடர்பாகவும் கர்நாடகா அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. கர்நாடகா அரசு தமிழகம் தொடர்பான விஷயங்களில் எதில்தான் மறுப்பு தெரிவிக்காமல் இருக்கிறது?

கனமழைக் காலங்களில் வீணாகும் உபரி நீரைத் தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரியாற்றில் இருந்து நீரேற்றும் திட்டம் மூலம் மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகளில் நிறைத்து, பாசனத் தேவைக்கு வழங்கி வாழ்க்கைத் தரத்தை உயர்த்துமாறு மாவட்ட விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

இன்றைய ஆய்வுக்குப் பின், அந்தத் திட்டத்தை ஏன் நிறைவேற்றக் கூடாது என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டுள்ளது. மழைக் காலங்களில் வீணாகும் காவிரி நீரை, தருமபுரி மாவட்ட ஏரிகளுக்கு வழங்கும் திட்டம் தொடர்பாகத் துறை அதிகாரிகள் மூலம் ஆய்வு நடத்தப்படும். அந்த ஆய்வறிக்கையைப் பெற்ற பின்னர் இந்தத் திட்டத்தை நிறைவேற்ற முயற்சி மேற்கொள்வேன்”.

இவ்வாறு அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.

இந்த ஆய்வின்போது, மாவட்ட ஆட்சியர் திவ்யதர்சினி, கூடுதல் ஆட்சியரும், ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலருமான மருத்துவர் வைத்திநாதன் உள்ளிட்ட பலரும் உடனிருந்தனர்.