வேளாண் சட்டங்களுக்கு எதிராக உழவர்கள் ஓராண்டாக கடுங்குளிர் உள்ளிட்ட கொடுமைகளை அனுபவித்து போராடினார்கள்.

மூன்று வேளாண் சட்டங்களையும் பிரதமர் மோடி திரும்பப் பெறுவதாக அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது என டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களிடையே இன்று ஆற்றிய உரையில், “ நாடு நலனுக்காக வேளாண் துறையில் பல்வேறு சீர்திருத்தங்களை கொண்டு வந்தோம். விவசாயிகளின் நலனுக்காக புதிய வேளாண் சட்டங்களை கொண்டு வந்தோம்.. இந்தச்சட்டம் தொடர்பாக விவசாயிகளிடம் தவறான தகவல் பரவி விட்டது.அவர்களை சமாதானப்படுத்த முடியவில்லை . அவர்கள் தொடர் போராட்டத்தில் இறங்கினர். அவர்களுக்கு பேச்சுவார்த்தை மூலம் புரிய வைக்க முயற்சித்தோம் பலனளிக்கவில்லை. எனவே மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்ப பெறுகிறோம்” என்றார்

மத்திய அரசின் இந்த நடவடிக்கையை பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வரவேற்றுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வேளாண் அமைப்புகளின் கோரிக்கையை ஏற்று 3 வேளாண் சட்டங்களையும் வாபஸ் பெறுவதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்திருக்கிறார். உழவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு எடுக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது.

வேளாண் சட்டங்களுக்கு எதிராக உழவர்கள் ஓராண்டாக கடுங்குளிர் உள்ளிட்ட கொடுமைகளை அனுபவித்து போராடினார்கள்.150-க்கும் மேற்பட்ட உழவர்களை இழந்தனர். ஆனாலும் தங்கள் நிலைப்பாட்டில் உறுதியாக இருந்து சாதித்துள்ளனர். இது உழவர்களுக்கு கிடைத்த பெரும் வெற்றி. உழவர்கள் முன்னேறினால் தான் நாடு முன்னேறும். இதைக் கருத்தில் கொண்டு கோதாவரி – காவிரி உள்ளிட்ட நதிநீர் இணைப்புகள், பாசனத் திட்டங்களை விரைவுபடுத்த வேண்டும். விளைபொருள் கட்டமைப்புகளை வலுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.