கிணற்றுக்குள் செல்லும் தண்ணீர், இப்பகுதியை சுற்றியுள்ள இடங்களின் நிலத்தடி நீர்மட்டம் உயரவும், உப்பு நீர் அதிகரிப்பதை கட்டுப்படுத்தவும் துணை புரிவதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

திருநெல்வேலி மாவட்டத்தில் எவ்வளவு நீர் சென்றாலும்  நிரம்பாத அதிசய கிணறு இருப்பதாக பரவிய தகவலையடுத்து. அதனை பார்க்க ஏராளமானோர் அங்கு குவிந்து வருகின்றனர். இந்த கிணறு நிரம்பியதாக சில வீடியோக்கள் வந்த நிலையில்,  நிலத்துக்கு சம அளவில் நீர்மட்டம் உயர்ந்துள்ளபோதிலும் தொடர்ந்து தண்ணீரை கிணறு உள்வாங்கி வருவதாக கூறப்படுகிறது.

தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில் கடந்த மூன்று வாரங்களாக நல்ல மழை பெய்துவருகிறது. இதன் காரணமாக, ஆறு, ஏரி, கால்வாய், குளம் போன்ற நீர்நிலைகள் எல்லாம் நிரம்பியுள்ளன. ஆனால், திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஒரு கிணறு இந்த தொடர் கனமழையிலும் நிரம்பாமல் ஆச்சரியமளிக்கிறது.

திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளையை  அடுத்த ஆயன்குளத்தில் இந்த அதிசய கிணறு உள்ளது. கோட்டைக்கருங்குளம் நம்பியாறு அணையிலிருந்து மழை வெள்ளப்பெருக்கால்  தண்ணீர் திறந்துவிடப்பட்டது. அதன்படி, 50 கன அடி நீர் இந்த கிணற்றினுள் பாயும்போது கிணறு நிரம்பாமல் உள்ளது.  கிணற்றுக்குள் செல்லும் தண்ணீர், இப்பகுதியை சுற்றியுள்ள இடங்களின் நிலத்தடி நீர்மட்டம் உயரவும், உப்பு நீர் அதிகரிப்பதை கட்டுப்படுத்தவும் துணை புரிவதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

பெருமழை பெய்தபோதும், இதுவரை இந்த கிணறு நிரம்பி தாங்கள் பார்த்தது இல்லை என்றும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். நெல்லை மாவட்டத்தில் மழை வெள்ளச் சேதத்தைத் தடுக்க அரசால் நியமிக்கப்பட்டுள்ள சிறப்பு அதிகாரியான அபூர்வா, நெல்லை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு ஆகியோர் இந்த கிணற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய ஆட்சியர் விஷ்ணு, கிணற்றில் தண்ணீர் சென்றால் சுற்றிலும் இருக்கும் 10 கிலோ மீட்டர் தூரத்துக்கு உள்ள விவசாய கிணறுகள் நீராதாரம் பெறுவதாகச் சொல்கிறார்கள். இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழக நிர்வாகத்துக்குத் தகவல் தெரிவித்து அவர்களை ஆய்வு நடத்தச் கூறியுள்ளோம். அதன் முடிவுகள் கிடைத்த பின்னர், அங்கு நீர் சேகரிப்பு கட்டமைப்புகளை உருவாக்குவது குறித்துப் பரிசீலிப்போம் என்று தெரிவித்தார்.

இதனிடையே அதிசய கிணறு நிரம்பியது போன்ற புகைப்படங்கள், வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவியது. எனினும், கிணற்றில் உள்ள நீர் நிலத்துக்கு சம அளவில் உயர்ந்துள்ளதாகவும் எனினும் தொடர்ந்து நீரை கிணறு உறிஞ்சி வருகிறது என்றும் அப்பகுதிவாசிகள் தெரிவிக்கின்றனர்.