வரத்து குறைவு காரணமாக, கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை மீண்டும் உயர்ந்துள்ளது. ஒரு கிலோ ரூ.100-க்கு நேற்று விற்பனை செய்யப்பட்டது.

மழை காரணமாக தக்காளி வரத்து குறைந்ததால், அண்மையில் அதன் விலை ஒரு கிலோ ரூ.150-ஐ கடந்து விற்பனை செய்யப்பட்டது. பின்னர், அரசு சார்பில் பண்ணை பசுமை கடைகளில் தக்காளி குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்பட்டது. மேலும் மகாராஷ்ட்ரா மாநிலத்தில் இருந்து அதிகளவு தக்காளி கொள்முதல் செய்யப்பட்டதால், அதன் விலை கிலோ ரூ.40 வரை படிப்படியாக குறைந்தது. இந்த சூழலில் வரத்து குறைந்ததால், தக்காளியின் விலைநேற்று மீண்டும் கிலோவுக்கு ரூ.100-ஐ தொட்டது. இது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக கோயம்பேடு சிறு மொத்த காய்கறி வியாபாரிகள் நல சங்கத்தின் தலைவர் எஸ்.எஸ்.முத்துக்குமார் கூறியதாவது:

கோயம்பேடு சந்தைக்கு சாதாரணமாக 80 லாரிகளில் தக்காளி வரும். அண்மையில் பெய்த மழையால் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடக மாநிலங்களில் தக்காளி சாகுபடி பாதிக்கப்பட்டது . சாலைகளும் சேதமடைந்துள்ள நிலையில், கோயம்பேடு சந்தைக்கு 35 முதல் 40 லாரிகளில்தான் தக்காளி வருகிறது.

இதுமட்டுமின்றி, ஆன்லைனில் விற்பனை செய்பவர்கள் தக்காளியை குடோன்களில் சேமித்து வைத்து செயற்கையாக விலையை ஏற்றும் நடவடிக்கையிலும் ஈடுபட்டு வருகின்றனர். இத்தகைய காரணங்களால் தக்காளி விலை மீண்டும் படிப்படியாக உயர்ந்து வருகிறது.

எனவே, அரசு வியாபாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி தக்காளியை கொள்முதல் செய்வதற்குள்ள தடைகளை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு செய்தால்தான் தக்காளி விலை உயர்வை நிரந்தரமாக கட்டுப்படுத்த முடியும். மேலும் மழையின்காரணமாக ஏற்பட்ட பாதிப்புகளால் இம்மாதம் இறுதி வரை விலை குறைவதற்கான சூழல் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

மல்லிகை விலை அதிகரிப்பு

பூ வியாபாரி பாலமுருகன் கூறும்போது, “மல்லிகை ஒரு கிலோ ரூ.200-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. தற்போது மல்லிகை பூ சீசன் இல்லாத காரணத்தால் வரத்து குறைந்துள்ளது. எனவே, ஒரு கிலோ ரூ.2000 வரைவிற்பனை செய்யப்பட்டு வருகிறது.வருகிற ஜனவரி மாதத்துக்குபிறகு மல்லிகை பூ சீசன் தொடங்கும். அப்போது மல்லிகைவிலை குறையும். மழையின் காரணமாக ஒரு கிலோ சம்பங்கிரூ.200-ல் இருந்து ரூ.800 வரைவிற்பனையாகி வருகிறது. பிற பூக்களின் விலையில் பெரிதாக மாற்றம் இல்லை” என்றார்.