இந்தியாவில் 18 வயதிற்கு கீழ் உள்ள சிறுவர்களுக்கு தடுப்பூசி போடுவது குறித்தும் இன்று வல்லுநர் குழு ஆலோசனை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட உள்ளது.

இந்தியாவில் கொரோனா பூஸ்டர் தடுப்பூசி அவசியமா என்பது குறித்து தேசிய நோய் பரவல் தடுப்பு வல்லுநர் குழு இன்று ஆலோசனை மேற்கொள்கிறது.

இந்தியாவில் கொரோனா ரைவஸ் தொற்றுக்கு எதிராக இரண்டு டோஸ்கள் கொண்ட கோவிஷீல்டு, கோவேக்சின் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. கொரோனாவை எதிர்த்து போராட இரண்டு டோஸ்கள் போதுமானது என்று வல்லுனர்கள் தெரிவித்து வந்தனர். ஆனால் அமெரிக்கா போன்ற நாடுகள் இரண்டாவது அலையில் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டதால் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொள்ள அனுமதி அளித்துள்ளன.

ஆனால், இந்தியாவில் பூஸ்டர் தடுப்பூசி மற்றும் 18 வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்த இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை. தற்போது ஒமைக்ரான் உருமாற்றம் வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகிறது. இதன் வீரியம் அதிகமாக இருப்பதால் பூஸ்டர் தடுப்பூசி அவசியம் தேவை என கருதப்படுகிறது. இதையடுத்து, உலகின் பல்வேறு நாடுகளும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்த முடிவு எடுத்துள்ளன.

அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவைத் தொடர்ந்து இந்தியாவிலும் பூஸ்டர் டோஸ் செலுத்துவது தொடர்பாக வல்லுநர் குழு இன்று கலந்து ஆலோசிக்கிறது. இந்தியாவிலும் 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் டோஸ் செலுத்த பரிசீலிக்க வேண்டும் என சார்ஸ் கொரோனா மரபியல் ஆய்வாளர்கள் ஒன்றிய அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

அதே போல தேசிய நோய் தடுப்பு தொழில்நுட்ப ஆலோசனை குழுவும் பூஸ்டர் டோஸ் செலுத்துவது தொடர்பாக மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. இந்த நிலையில் தேசிய நோய் தடுப்பு தொழில்நுட்ப ஆலோசனைக் குழு இன்று மீண்டும் டெல்லியில் கூடி இது குறித்து ஆலோசனை செய்கிறது.

அனைவருக்கும் பூஸ்டர் டோஸ் செலுத்துவதற்கு பதிலாக தேவைப்படுவோருக்கு மட்டும் செலுத்துவது குறித்து இன்றைய கூட்டத்தில் முடிவு எடுக்கப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது. மேலும் 18 வயதிற்கு கீழ் உள்ள சிறுவர்களுக்கு தடுப்பூசி போடுவது குறித்தும் இந்த கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட உள்ளது.