Site icon Metro People

முதுகுளத்தூர் மணிகண்டன் மரணம் குறித்து விசாரணை வேண்டும் – பா.ஜ.க தலைவர் அண்ணாமலை வலியுறுத்தல்

ராமநாதபுரத்தில் காவல்துறை விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட மணிகண்டன் மரணம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்படவேண்டும் என்று பா.ஜ.க தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

அருகே கீழத்தூவல் காவல் நிலைய போலீசார் மேலதூவல் கிராமம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த நீர்க்கோழியேந்தல் கிராமத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர் மணிகண்டன் தனது நண்பரான சஞ்சய் உடன் மாலை 4.30 க்கு முதுகுளத்தூர் வந்துள்ளார்.

வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார் மணிகண்டனின் இரு சக்கர வாகனத்தை தடுத்து நிறுத்தியதாக கூறப்படுகிறது.  கல்லூரி மாணவன் மணிகண்டன் நிற்காமல் சென்றதால் ஆத்திரமடைந்த போலீஸார் அவரை பின்தொடர்ந்து சென்றுள்ளனர். மாணவனை விரட்டிப்பிடித்து போலீஸார் மணிகண்டனை மட்டும் மேலதூவல் கிராமத்திலிருந்து அடித்து காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்து சென்றுள்ளனர்.

இதையடுத்து மாலை 6.30 மணிக்கு மணிகண்டனின் பெற்றோருக்கு தொலைபேசியில் தொடர்புகொண்டு கல்லூரி மாணவன் மணிகண்டனை வீட்டிற்கு அழைத்து செல்லுமாறு தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து காவல்நிலையம் வந்த மாணவனின் பெற்றோர் நடக்கக் கூட முடியாத நிலையில் இருந்த மணிகண்டனை வீட்டிற்கு அழைத்து சென்றனர். வீட்டில் 3 முறை மணிகண்டன் ரத்த வாந்தி எடுத்துள்ளார். இரவில் தூங்கிய நிலையில் காலை இறந்த நிலையில் படுக்கையில் கிடந்துள்ளார். மணிகண்டனின் உடலை உறவினர்கள் சோதித்து பார்த்ததில் ஆண் உறுப்பில் வீக்கம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதையடுத்து போலீஸார் மணிகண்டனை அடித்துக் கொலை செய்ததாக உறவினர்கள் குற்றச்சாட்டுகின்றனர். மேலும் போலீசார் தரப்பில் இருந்து பாம்பு கடித்து இறந்திருக்கலாம் என விளக்கம் அளித்துள்ள நிலையில் அதை ஏற்க மறுத்த உறவினர்களிடம் போலீசார் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர். இந்தநிலையில், மணிகண்டன் மரணத்துக்கு நீதி வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் #justiceformanikandan என்ற ஹேஷ்டேக் இணையத்தில் ட்ரெண்டாகிவருகிறது.

இதுதொடர்பாக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை பதிவிட்ட ட்விட்டர் பதிவில், ‘ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பகுதியை சார்ந்த சகோதரர் மணிகண்டன் அவர்களுடைய மரணம் அதிர்ச்சி அளிக்கிறது. வாகன பரிசோதனையின் போது அழைத்துச் செல்லப்பட்ட சகோதரர் காவல்துறை துன்புறுத்தலால் இறந்திருக்கலாம் என்கின்ற குற்றச்சாட்டை மூடி மறைக்காமல் முழுமையாக விசாரணைக்கு உட்படுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறு எந்த மட்டத்தில் நடந்திருந்தாலும் கூட, உரிய தண்டனை அளிக்க வேண்டும். சகோதரரை இழந்து வாடும் அவருடைய குடும்பத்திற்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கல்கள். அன்னாரது ஆன்மா சாந்தி அடையட்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version