அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து அதிமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

அதிமுக ஒருங்கிணைப்பாளர்‌, இணை ஒருங்கிணைப்பாளர்‌ பொறுப்பிற்கான தேர்தல்‌ அறிவிப்பு 2.12.2021 அன்று வெளியிடப்பட்டது. அதன்படி, வேட்பு மனுக்கள்‌ 3.12.2021, 4.12.2021 ஆகிய தேதிகளில்‌ தலைமைக்‌ கழகத்தில்‌ பெறப்பட்டன. அதில்‌, ஓ. பன்னீர்செல்வம்‌ அதிமுக ஒருங்கிணைப்பாளர்‌ பொறுப்பிற்கும்‌, எடப்பாடி பழனிசாமி அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர்‌ பொறுப்பிற்கும்‌, கடந்த 4.12.2021 அன்று இருவரும்‌ இணைந்தே வேட்பு மனுவைத் தாக்கல்‌ செய்தனர்‌.

அதிமுக ஒருங்கிணைப்பாளர்‌ பொறுப்பிற்கு ஓ.பன்னீர்செல்வம்‌, இணை ஒருங்கிணைப்பாளர்‌ பொறுப்பிற்கு எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவரும்‌ போட்டியிட வேண்டி, தலைமைக்‌ கழக நிர்வாகிகள்‌, மாவட்டச்‌ செயலாளர்கள்‌, முன்னாள்‌ அமைச்சர்கள்‌ உள்ளிட்ட அதிமுகவில் பல்வேறு பொறுப்புகளில்‌ பணியாற்றி வரும்‌ நிர்வாகிகளும்‌ வேட்பு மனுக்களை அளித்தனர்‌.

இந்த வேட்பு மனுக்கள்‌ 5.12.2021 அன்று, அதிமுக சட்டதிட்ட விதிகளுக்கு உட்பட்டு முறையாகப் பரிசீலனை செய்யப்பட்டன. ஓ.பன்னீர்செல்வம்‌ அதிமுக ஒருங்கிணைப்பாளர்‌ பொறுப்பிற்கும்‌, எடப்பாடி பழனிசாமி இணை ஒருங்கிணைப்பாளர்‌ பொறுப்பிற்கும்‌ போட்டியிட வேண்டி ஒரே ஒரு மனு மட்டுமே தாக்கல்‌ செய்யப்பட்டுள்ளதாலும்‌, அவர்களுடைய மனு கழக சட்ட திட்ட விதி – 20(அ : பிரிவு-2ன்படி சரியாக உள்ளதாலும்‌ ஓ.பன்னீர்செல்வம்‌, எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவரும்‌ அதிமுக ஒருங்கிணைப்பாளர்‌, அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர்‌ பொறுப்பிற்கு ஒருமனதாகப் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள்‌ என்பது அறிவிக்கப்படுகிறது”.

இவ்வாறு அதிமுக தெரிவித்துள்ளது.