தமிழகத்தில் விரைவில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், கரோனா தடுப்பூசி போட்டிருப்பதை கட்டாயமாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதியளித்துள்ளார்.

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் முழுமையாக நடந்து முடிந்துள்ள நிலையில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கான பணிகளை மாநில தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது.

இதையொட்டி, அனைத்து மாவட்டங்களிலும் உள்ள நகர்ப்புற உள்ளாட்சிகளின் வார்டு வாரியான புகைப்பட வாக்காளர் பட்டியலை, அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் கடந்த 9-ம் தேதி வெளியிட்டனர்.

இதற்கிடையே, உலகை அச்சுறுத்தும் ஒமைக்ரான் வகை கரோனாவைரஸ் பரவல் இந்தியாவிலும் தென்படத் தொடங்கியுள்ளது. நாடுமுழுவதும் 25-க்கும் மேற்பட்டோருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து, தமிழகத்தில் கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு கடுமையாக்கி வருகிறது. திருமண மண்டபங்கள், திரையரங்குகள், ஜவுளி, நியாயவிலைக் கடைகள், சூப்பர் மார்க்கெட்கள், கடைவீதிகள் உள்ளிட்ட இடங்களில் 2 தவணைகரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்களை அனுமதிக்க வேண்டாம் என, அந்தந்த நிறுவனங்களின் நிர்வாகிகளை சுகாதாரத் துறை கேட்டுக்கொண்டுள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் கரோனா பரவலைத் தடுக்கும் நோக்கில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பணியில் ஈடுபடுவோர் மற்றும் வாக்குச்சாவடி அலுவலர்கள் அனைவரும் 2 தவணை கரோனா தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையத்துக்கு, சுகாதாரத் துறை ஆலோசனை வழங்கியுள்ளது. அதை மாநில தேர்தல்ஆணையமும் ஏற்றுக்கொண்டுள்ளது.

அதேசமயம், ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் சுமார் 1,000 பேரைஎதிர்கொள்ளும் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு 2 தவணை தடுப்பூசியை வலியுறுத்தும் சுகாதாரத் துறை, மாநில தேர்தல் ஆணையம், பல்லாயிரக்கணக்கானோரை பொது இடங்களில் சந்தித்து வாக்கு சேகரிக்க உள்ள வேட்பாளர்கள் கட்டாயம் 2 தவணை தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என அறிவிக்காதது வேடிக்கையாக இருப்பதாக தேர்தல் பணியில் ஈடுபட உள்ள ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து மாநில தேர்தல் ஆணையத்தில் கேட்டதற்கு, பதில் அளிக்கவில்லை.

இது தொடர்பாக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் கேட்டபோது, “கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட மாணவர்களை மட்டுமே கல்லூரிகளில் அனுமதிக்க வேண்டும் என்று உயர்கல்வித் துறைக்கு அறிவுறுத்தி இருக்கிறோம்.

இதேபோல, உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் கட்டாயம் கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டிருக்க வேண்டும் என்ற விதிமுறையையும் கொண்டு வந்துவிடுவோம்” என்றார்.