உள்ளாட்சித் தேர்தல் துளிகள்: காஞ்சிபுரம் உள்ளாவூர் ஊராட்சியில் வாக்குப்பதிவு நிறுத்தம்; ராணிப்பேட்டையில் திமுக – அதிமுகவினர் வாக்குவாதம்

தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களில் உள்ள 39 ஊராட்சி ஒன்றியங்களில் இன்று காலை சரியாக 7 மணியளவில் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.

தேர்தலில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக மாநிலத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இருப்பினும் ஒருசில இடங்களில் சில பிரச்சினைகள் எழுந்தன.

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியத்துக்கு உள்ளாவூர் ஊராட்சியில் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டுள்ளது. வாக்குச்சீட்டில் ஊராட்சித் தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட வேட்பாளரின் பெயர் லட்சுமி என்பதற்கு பதிலாக தனலட்சுமி என அச்சிடப்பட்டிருந்ததால் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டுள்ளது.

அச்சுப்பிழையால்தான் இந்தக் குளறுபடி ஏற்பட்டது விசாரணையில் தெரியவந்தது. பெயர் தவறாக இருந்தால் தனது வெற்றி வாய்ப்பு பாதிக்கும் என வேட்பாளர் கூறினார். அவரது முகவர்களும் அதனையே தெரிவித்தனர்.

உடனே தேர்தல் நடத்தும் அலுவலர், வாக்குச்சீட்டில் பெயரில் உள்ள தவறு மை கொண்டு அழிக்கப்படும் என்று கூறினார். ஆனால், அதற்கும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதால் அங்கு வாக்குப்பதிவு தொடர்ந்து நிறுத்தப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டுள்ளதால் வாக்காளர்கள் ஏமாற்றமடைந்தனர்.

இதேபோல் ராணிப்பேட்டை அரசுப் பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில், திமுக அதிமுகவினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குச்சாவடி மையத்திற்கு வெளியில் திமுக வேட்பாளர்கள் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டதாகக் கூறி வாக்குவாதம் ஏற்பட்டது.

விழுப்புரம் பொன்னங்குப்பம் ஊராட்சியில் மக்கள் தேர்தலைப் புறக்கணித்து வாக்களிக்க வரவில்லை. பொன்னங்குப்பம் ஊராட்சியைத் தனியாகப் பிரித்துக் கொடுத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்தும், தலைவர் பதவியை ஏலம் விட்டதற்குக் கண்டனம் தெரிவித்தும் இதுவரை தங்கள் ஊராட்சியில் எவ்வித அடிப்படைத் தேவைகளுமே இதுவரை பூர்த்தி செய்யப்படவில்லை எனக் கூறியும் மக்கள் தேர்தலைப் புறக்கணித்துள்ளனர். பொதுமக்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

அதேபோல், திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி ஊராட்சி ஒன்றியம் மாதுடையார்குளம் கிராமத்தில் திறக்கப்பட்ட ரேஷன் கடை செயல்பட நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கிராம மக்கள் தேர்தலைப் புறக்கணித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இதுவரை அங்கு ஒரே ஒருவர் மட்டுமே வாக்களித்துள்ளார்.

நெல்லை மாவட்டம் மேலப்புத்தனேரி வாக்குச்சாவடி அருகே வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்த 6 பேர் போலீஸாரால் கைது செய்யப்பட்டனர்.

நெல்லை வாக்குப்பதிவு நிலவரம்:

நெல்லை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் காலை 9 மணி நிலவரப்படி 9.75 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.

பாப்பாகுடியில் காலை 9 மணி நிலவரப்படி 8% வாக்குப் பதிவாகியுள்ளது.
அம்பாசமுத்திரத்தில் காலை 9 மணி நிலவரப்படி 7.7% வாக்குப் பதிவாகியுள்ளது.
சேரன்மகாதேவியில் காலை 9 மணி நிலவரப்படி 13 % வாக்குப் பதிவாகியுள்ளது.
மாணூரில்ர் காலை 9 மணி நிலவரப்படி 9% வாக்குப் பதிவாகியுள்ளது.

தென்காசி மாவட்டத்தில் ஆலங்குளம் ஊராட்சியில் 12.02%, கடயம் ஊராட்சியில் 10.08%, கீழப்பாவூரில் 10.65%, மேலநீதிநல்லூரில் 11.24%, வாசுதேவநல்லூரில் 9.22% வாக்குகள் பதிவாகியுள்ளன. மாவட்டம் முழுவதும் உள்ள 5 ஊராட்சிகளில் காலை 9 மணி நிலவரப்படி மொத்தம் 10.78% வாக்குப்பதிவாகியுள்ளது.

9 மாவட்டங்களில் தேர்தல்:

தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை,திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான வாக்குப்பதிவு 2 கட்டங்களாக இன்று அக்.6ஆம் தேதி மற்றும் வரும் 9-ம் தேதிகளில் நடைபெற உள்ளன.

மற்றும் இதர 28 மாவட்டங்களில் கடந்த ஜூன் மாத நிலவரப்படி காலியாக உள்ள ஊரக உள்ளாட்சிப் பதவிகளுக்கான இடைத்தேர்தலும் நடைபெறுகிறது.

தேர்தல் நடைபெறும் பகுதிகளில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வாக்காளர்கள் வாக்களிக்க ஏதுவாக சம்பளத்துடன் கூடிய விடுப்பு அளிக்க தனியார் நிறுவனங்களுக்கு தொழிலாளர் நல ஆணையம் உத்தரவிட்டுள்ளது.