கோவாக்சின் தடுப்பூசிக்கு ஹங்கேரி நாட்டின் சிறந்த தயாரிப்புக்கான அங்கீகார சான்றிதழ் கிடைததுள்ளது.

இந்தியாவில் தடுப்பூசி போடும் பணிகள் ஜனவரி 16-ம் தேதி முதல் தொடங்கப்பட்டுள்ளன. இந்தியாவில் தற்போது கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் ஆகிய இரண்டு தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது.

இந்தியாவில் தற்போது 48 கோடிக்கும் அதிகமானோருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இரண்டு டோஸ்கள் போட்ட பிறகு கோவிஷீல்ட், கோவாக்சின் இரண்டுமே சிறந்த பலன்களைக் கொடுப்பதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

பாரத் பயோ டெக் நிறுவனம் தயாரிக்கும் கோவாக்சின் தடுப்பூசி டெல்டா போன்ற மரபணு உருமாறிய கரோனா வைரஸ்களுக்கு எதிராக சிறப்பாக செயல்படுவதாக அடுத்தடுத்து இரண்டு ஆய்வுகள் தெரிவித்தன.

எனினும் கோவாக்சின் தடுப்பூசிக்கு உலக சுகாதார நிறுவனத்தின் அனுமதி இன்னமும் கிடைக்கப் பெறவில்லை.
டெல்டா பிளஸ் கரோனாவுக்கு எதிராக கோவாக்சின் சிறப்பாக செயல்படுகிறது என ஐசிஎம்ஆர் ஆய்வில் தெரிய வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் கோவாக்சின் தடுப்பூசிக்கு ஹங்கேரி நாட்டின் சிறந்த தயாரிப்புக்கான அங்கீகாரம் கிடைததுள்ளது.

இதுகுறித்து பாரத் பயோடெக் நிறுவனம் தனது டவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது:
கோவாக்சின் தடுப்பூசியின் மற்றொரு மைல்கல்லாக ஹங்கேரியிடம் இருந்து சிறந்த தயாரிப்பு பயிற்சி சான்றிதழை (ஜிஎம்பி) பெற்றுள்ளது. இது EUDRAGDMP என்ற ஐரோப்பிய சமூகத்திடமிருந்து பெற்ற சிறந்த உற்பத்திக்கான நற்சான்றிதழ். இதனை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

இவ்வாறு அதில் கூறியுள்ளது.