“துணைவேந்தர் நியமனத்தில் அரசியல் உள்நோக்கத்துடன் ஆளுநர் குறுக்கிடுவதாகக் குற்றம்சாட்டும் கேரள முதல்வர் பினராயி விஜயன், ஏதேனும் ஓர் உதாரணத்தைக் காட்டட்டும், நான் பதவி விலகுகிறேன்” என அம்மாநில ஆளுநர் ஆரிஃப் முகம்மது கான் சவால் விடுத்துள்ளார்.
திருவனந்தபுரத்தில் கடந்த புதன்கிழமை (நவ.2) நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய முதல்வர் பினராயி விஜயன், கேரளாவில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களையும் ஆர்.எஸ்.எஸ். மற்றும் சங்க பரிவார் அமைப்புகளின் மையங்களாக மாற்ற ஆளுநர் முயல்வதாகக் குற்றம்சாட்டி இருந்தார்.
இந்நிலையில், இந்தக் குற்றச்சாட்டுக்கு புதுடெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய ஆளுநர் ஆரிஃப் முகம்மது கான் பதில் அளித்தார். அவர் கூறியதாவது: “கேரள பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிகளுக்கு ஆர்.எஸ்.எஸ் நபர்களைக் கொண்டு வர வேண்டும் என்பதற்காகவே, தற்போதைய துணைவேந்தர்களுக்கு எதிராக நான் செயல்படுவதாக முதல்வர் கூறி இருக்கிறார்.
கடந்த 3 ஆண்டுகளில் நான், எனது அதிகாரத்தைப் பயன்படுத்தி ஆர்.எஸ்.எஸ் நபர் மட்டுமல்ல வேறு யாராவது ஒருவரையாவது அவ்வாறு நியமித்திருக்கிறேனா என்று முதல்வரை கேட்க விரும்புகிறேன். அவ்வாறு நான் நியமித்திருப்பதாக ஒரு உதாரணத்தையாவது அவர் காட்ட வேண்டும். அவ்வாறு அவர் காட்டினால் நான் ஆளுநர் பதவியை ராஜினாமா செய்துவிடுகிறேன். அதேநேரத்தில், அவ்வாறு காட்ட முடியாவிட்டால், அவர் பதவி விலகத் தயாரா? எனக்கு எதிராக மிகப் பெரிய குற்றச்சாட்டை கூறும் அவர், ஆதாரத்துடன் பேச வேண்டும்.
கேரள முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் அச்சம் நிறைந்த ஆட்சி நடக்கிறது. தங்கக் கடத்தல் வழக்கில் முதல்வர் பினராயி விஜயன் மீது நான் எந்தக் குற்றச்சாட்டும் கூறவில்லை. அதேநேரத்தில், இந்த வக்கில் அவர் பதில் அளிக்க வேண்டிய கேள்விகள் இருக்கின்றன. தங்க கடத்தலில் ஈடுபட்டவர்களுக்கு ஆதரவாக செயல்பட்ட குற்றச்சாட்டின் கீழ் முதல்வரின் செயலாளர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். முதல்வருக்குத் தெரியாமல்தான் இது நடந்ததா? அவருக்குத் தெரியாமல்தான் இது நடந்தது எனில் முதல்வரின் திறன் குறித்த கேள்வி எழுகிறது.
தங்கக் கடத்தலுக்கு உறுதுணைபுரிந்தவர்கள் முதல்வர் அலுவலகத்தில் இருந்திருக்கிறார்கள். ஒவ்வொருவரும் அவரவருக்கான எல்லையை உணர்ந்து செயல்பட வேண்டும். ஆளுநரின் அழைப்பை முதல்வர் நிராகரித்துள்ளார். இதன்மூலம் அவர் எல்லையை மீறி உள்ளார்” என்று அவர் கூறினார்.