என் மகன் அரசியலுக்கு வருவதை நான் விரும்பவில்லை என்று, மதிமுக பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ கூறியுள்ளார்.

தென்காசி மாவட்டத்தில் இரண்டாம்கட்டமாக 5 ஊராட்சி ஒன்றியங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் இன்று (அக். 09) நடைபெற்று வருகிறது. குருவிகுளம் ஒன்றியம், கலிங்கப்பட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, அவரது மகன் துரை வைகோ ஆகியோர் வாக்களித்தார்.

பின்னர், செய்தியாளர்களிடம் வைகோ கூறும்போது, “நான் 56 ஆண்டுகாலமாக அரசியலில் கஷ்டப்பட்டுள்ளேன். 28 ஆண்டுகாலம் லட்சக்கணக்கான கிலோமீட்டர் தூரம் காரில் பயணம், ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் நடை பயணம் மேற்கொண்டுள்ளேன். நூற்றுக்கணக்கான போராட்டங்கள் நடத்தியுள்ளேன். ஐந்தரை ஆண்டுகள் சிறையில் இருந்துள்ளேன்.

எனது வாழ்க்கையையே அரசியலில் ஓரளவு அழித்துக்கொண்டேன். இது என்னோடு போகட்டும், எனது மகனும் (துரை வையாபுரி) அரசியலுக்கு வந்து கஷ்டப்பட வேண்டாம் என்பதால், அவர் அரசியலுக்கு வருவதை நான் விரும்பவில்லை. கட்சிக்காரர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது வருகிற 20-ம் தேதி நடைபெறும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் தெரியும்.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற விவசாயிகள் படுகொலை ஈவு இரக்கமற்ற கோரப் படுகொலை. தாலிபான்கள் செயல்பாடுகளைப் போல் இங்கு செய்து உள்ளனர். இதற்கு மன்னிப்பே கிடையாது. நீதிமன்றத்தைக்கூட அவர்கள் மதிக்கவில்லை” என்றார்.