இஸ்லாமியர்கள், இந்துக்கள் குறித்து நான் தவறாக கூறியதாகச் சொன்னால், நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க தயாராக இருக்கிறேன்” என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்தார்.

வேலூர் மாவட்டம் காட்பாடி டான்போஸ்கோ மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் உள்ள வாக்குச்சாவடியில் திமுக பொதுச் செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் இன்று காலை வாக்களித்தார். பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, “தமிழகத்தில் நடைபெறும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக அமோகமாக வெற்றி பெறும். திமுகவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. அந்தப் பிரகாசத்தை எப்படியும் மங்க வைக்கவேண்டும் என்று இந்த நேரத்திலும் கூட எதிர்க்கட்சிகள் சில இடங்களில் கலாட்டா செய்கிறார்கள்.

தோல்வி உறுதி என்று தெரிந்தும் கூட கோவை உட்பட சில இடங்களில் அதிமுகவினர் கலாட்டா செய்ய முற்பட்டிருக்கிறார்கள். இவை எல்லாம் தோல்வியின் அறிகுறிகள்தான். திமுக மேயர் பதவிகளையும் நகராட்சி பதவிகளையும் பேரூராட்சி பதிவிகளையும் கைப்பற்றும் என்பதில் நம்பிக்கை உள்ளது.

முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டுவோம் என கேரள மாநில ஆளுநர் சொல்கிறார் என்றால், அது அரசாங்கமே சொல்வது என்றுதான் பொருள். முல்லை பெரியாறில் புதிய அணை கட்டுவது என்பது விஷமத்தனமான ஒன்று. இருக்கின்ற அணையே பலமாக இருக்கிறது என உச்ச நீதிமன்றம் தெரிவித்த பிறகும் எல்லா சட்ட நுணுக்கங்கள் தெரிந்த பிறகும் நாங்கள் அணை கட்டுவோம் என சொல்வது அரசியல் சட்டத்தையும் மதிக்க மாட்டோம், உச்ச நீதிமன்ற தீர்ப்பையும் மதிக்க மாட்டோம் என்று ஒரு ஆளும் கட்சி ஆளுநர் வாயிலாக சொல்வது ஜனநாயகத்துக்கு ஏற்புடையதல்ல.

முல்லை பெரியாறில் புதிய அணை கட்டுவதில் அவர்கள் எவ்வளவு உறுதியாக இருக்கிறார்களோ, அதை விட ஆயிரம் மடங்கு அணை கட்டுவதை தடுப்பதில் நாங்கள் திடமாக உள்ளோம். கோதாவரி – கிருஷ்ணா இணைப்பு திட்டத்தை சில மாநிலங்கள் எதிர்ப்பது என்பது அந்த மாநிலங்களின் பிரச்சினை. தண்ணீர் கொடுத்தால் நாங்கள் அதை வரவேற்போம்.

இஸ்லாமியர்கள் குறித்து நான் ஒரு வார்த்தை கூட தவறாக பேசவில்லை. தவறாக பேசியதாக எங்கேயாவது சொல்லச் சொல்லுங்கள் பார்க்கலாம். யாரோ சில பேர் ஆதாயம் தேடுவதற்காக நான் பேசியதாக கூறுகிறார்கள். நான் இஸ்லாமியரை பற்றியோ, இந்துவை பற்றியோ, இல்லை எந்த இனத்தைப் பற்றிய ஒரு வார்த்தை பேசினேன் என சொல்ல சொல்லுங்கள். நான் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க தயாராக இருக்கிறேன். பொதுவாக மேடையில் நீங்கள் செய்தால்தான் நாங்கள் செய்வோம் என பேசுவது அரசியல் கட்சிகளின் வாடிக்கை.

நீண்ட காலம் அமைச்சராக இருப்பவர்கள் கூட தர்ணா என்ற மோசடி செய்து ஆட்சியர் அலுவலகம் முன்னால் விபரீதத்தை ஏற்படுத்தி இருப்பது நல்லதல்ல. எப்படியாவது கோயம்புத்தூரை பிடித்துவிடுவோம் என்று எண்ணினார்கள். அதை நாங்கள் முறியடித்து விட்டோம். அந்த ஆத்திரத்தில் இப்படிச் செய்கிறார்கள்” என்று அவர் கூறினார்.

முன்னதாக, வாணியம்பாடியில் திமுக வெல்லவிட்டால் அப்பகுதி அடுத்த 5 ஆண்டுகளுக்கு புறக்கணிக்கப்படும் என்று திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் மேடை ஒன்றில் பேசியிருந்தார். அவ்வீடியோவை சிலர் குறிப்பிட்டு துரைமுருகன் இஸ்லாமியர்களுக்கு எதிராக பேசி விட்டதாக சமூக வலைதளங்களில் பகிர்ந்து வந்தனர். இந்த நிலையில் அதற்கு தற்போது துரைமுருகன் விளக்கம் அளித்துள்ளார்.