எடப்பாடி பழனிசாமி மற்றும் கே.பி.முனுசாமி ஆகியோரை அதிமுகவில் இருந்து தான் நீக்குவதாக ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.

ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் 3 பேரை கட்சியில் இருந்து நீக்கி அதிமுக பொதுக்குழுவில் சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இது தொடர்பாக அதிமுக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம், “அதிமுக சட்ட விதிகளின்படி தொண்டர்கள் என்னை ஒருங்கிணைப்பாளராக தேர்வு செய்தனர். என்னை நீக்க எடப்பாடி பழனிசாமிக்கும், கே.பி.முனுசாமிக்கும் அதிகாரம் இல்லை.

அதிமுக விதிகளுக்கு புறம்பாக தன்னிச்சையாக செயல்பட்ட எடப்பாடி பழனிசாமி மற்றும் கே.பி.முனுசாமிக்கு கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். இருவரையும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவிகளில் இருந்து நீக்குவதாக அறிவிக்கிறேன். அதிமுக விதிகளின்படி தொண்டர்களுடன் இணைந்து நீதிமன்றத்திற்கு சென்று நீதியை பெறுவோம்” என்றார் ஓ.பன்னீர்செல்வம்.

 

 

 

ஓபிஎஸ் நீக்கம்: அதிமுக பொதுக்குழு

திமுகவில் இருந்து ஓ.பன்னீர்செல்வத்தை நீக்க பொதுக்குழுவில் சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதிமுக பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் இன்று நடைபெற்றது. இதில் தலைவர்கள் பேசிக்கொண்டு இருக்கும்போது பொதுக் குழு உறுப்பினர்கள் ஓ.பன்னீர்செல்வத்தை கட்சியில் இருந்த நீக்க வேண்டும் என்று கோஷங்களை எழுப்பினர்.

அப்போது பேசிய மூத்த தலைவர் கே.பி.முனுசாமி, “பொதுக் குழு உறுப்பினர்களாகிய நீங்கள் உங்களின் உணர்வுகள் தெரிவித்து வருகிறீர்கள். 1.50 கோடி தொண்டர்களின் உணர்வுகளை பிரதிபலித்து வருகிறீர்கள். உங்களுடைய உணர்வுகள் நிச்சயமாக நிறைவேற்றப்படும். அவரை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்று பொதுக்குழு உறுப்பினர்கள்தான் கூறுகின்றனர். உங்களுடைய உணர்வுகளை தீர்மானமாக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கொண்டு வருவார். அதுவரை அமைதி காக்கவும்” என்று பேசினார்.

இதனைத் தொடர்ந்து அதிமுக பொருளாளர் மற்றும் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து உறுப்பினர் பொறுப்புகளில் இருந்து ஓ.பன்னீர்செல்வத்தை நீக்க வேண்டும் என்ற தீர்மானத்தை முன்னாள் அமைச்சர் நந்தம் விஸ்வநாதன் கொண்டு வந்தார். இந்த தீர்மானத்தை பொள்ளாச்சி ஜெயராமன் முன்மொழிந்தார்.

மேலும், ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்கள் வைத்தியலிங்கம்,ஜெ.சி.டி பிராபகர், பி.எச்.மனோஜ் பாண்டியன் ஆகிய 3 பேரையும் நீக்கக் கோரி தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதனைத் தொடர்ந்து அனைத்து பொதுக்குழு உறுப்பினர்கள் ஆதரவுடன் இந்த சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக இபிஎஸ் தேர்வு

உயர் நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் இன்று காலை 9.15 மணிக்கு வானகரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. முதலில் காலை 9.15 மணிக்கு அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் தலைமையில் செயற்குழு நடைபெற்றது. இந்த செயற்குழு கூட்டத்தில் பொதுக்குழுவில் நிறைவேற்றபடவுள்ள 16 தீர்மானங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இந்தச் செயற்குழு கூட்டம் 10 நிமிடங்கள் மட்டுமே நடைபெற்றது. சரியாக 9.25 மணிக்கு செயற்குழு நிறைவு பெற்றது. இதனைத் தொடர்ந்து பொதுக்குழு கூட்டம் நடைபெறும் இடத்திற்கு அனைத்து உறுப்பினர்களும் சென்றனர்.

அதிமுக பொதுக்குழு கூட்டம் சரியாக 9.35 மணிக்கு தொடங்கியது. முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் வரவேற்புரை வழங்கினார். பொதுக்குழுவிற்கு அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் தலைமை தாங்கி பொதுக்குழு கூட்டத்தை நடத்தித் தர வேண்டும் என்ற தீர்மானத்தை எடப்பாடி பழனிசாமி முன்மொழிந்தார். இதை கே.பிமுனுசாமி வழிமொழிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதனைத் தொடர்ந்து 16 தீர்மானங்கள் நத்தம் விஸ்வநாதன் முன்மொழிந்தார். இந்த தீர்மானங்களை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வழிமொழிந்தார். இதனைத் தொடர்ந்து, அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார்.