தமிழக மக்களுடன் இணைந்து பிரதமர் நரேந்திர மோடியை ஆளுநர் ஆர்.என்.ரவி வரவேற்பதாக ஆளுநர் மாளிகை ட்வீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா இன்று மாலை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது. இதில் பிரதமர் மோடி, ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாகூர், முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்கின்றனர். இந்நிலையில் தமிழக மக்களுடன் இணைந்து பிரதமர் மோடியை வரவேற்கிறேன் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஆளுநர் மாளிகை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ” சென்னையில் நடைபெறும் 44வது ஃபைடே #செஸ்ஒலிம்பியாட் போட்டியை தொடங்கி வைப்பதற்கும் மற்றும் அண்ணா பல்கலைக்கழகத்தின் 42வது பட்டமளிப்பு விழாவிற்கு முதன்மை விருந்தினராக கலந்து கொள்ள நமது அன்புக்குரிய பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி, அவர்கள் வருகை தருகிறார்.பாரதப் பிரதமர் அவர்களை மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் திரு.ஆர்.என்.ரவி ,அவர்கள் தமிழக மக்களுடன் இணைந்து வரவேற்கிறார். ” என்று கூறப்பட்டுள்ளது.