நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கு பின்னர் கிராம், கிராமமாக மக்களை சந்திப்பேன் என சேலத்தில் நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பாமக இளைஞர் சங்கத் தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்பி தெரிவித்தார்.

சேலம் மாநகராட்சித் தேர்தலில் போட்டியிடும் பாமக வேட்பாளர்களை ஆதரித்து, சேலம் கோட்டை மைதானத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் அவர் பேசியதாவது:

மக்களிடம் நேரடித் தொடர்பு கொண்ட உள்ளாட்சி அமைப்பில் மாநகராட்சி மேயருக்கு வானளாவிய அதிகாரம் உள்ளது. பாமக-வைச் சேர்ந்தவர் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டால், அவர் போடும் முதல் கையெழுத்து சேலத்தில் உள்ள அனைத்து மதுக்கடைகளையும் மூடுவதற்காகவே இருக்கும். இதைக் கூறும் தைரியம் திமுக, அதிமுக மேயர்களுக்கு உண்டா?

திமுக, அதிமுக வேட்பாளர்கள் கோடீஸ்வரர்கள். அவர்கள் வெற்றி பெற்றால், மக்களை சந்திக்க வர மாட்டார்கள். திமுக, அதிமுக கட்சிகளின் 55 ஆண்டு கால ஆட்சியில் சேலம் மாவட்டத்தில் எந்த முன்னேற்றமும் இல்லை.

சேலத்தில் இப்போது கட்டப்பட்டுள்ள மேம்பாலங்களால் எதிர்காலத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும். அதனால், இந்த பாலங்களை இடிக்க வேண்டியதாக இருக்கும். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்குப் பின்னர், கிராமம், கிராமமாக வந்து மக்களை சந்திப்பேன். இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில், பாமக எம்எல்ஏ-க்கள் அருள், சதாசிவம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.