“புதுச்சேரி மக்களுக்கு நல்லது நடக்க முதல்வரும், நானும் இணக்கமாக செயல்படுகிறோம்” என முன்னாள் முதல்வர் நாராயணசாமி குற்றச்சாட்டுக்கு ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பதிலடி கொடுத்துள்ளார்.

புதுச்சேரியில் தனியார் பள்ளியில் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதனை மாநில ஆளுநர் தமிழிசை நேரில் பார்வையிட்ட ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஆளுநர் தமிழிசை கூறியது: “புதுச்சேரியில் 15 முதல் 18 வயதிற்கு உட்பட்டவர்கள் 83 ஆயிரம் போர் இருக்கிறார்கள். அதில் 33 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது. இன்னும் மூன்று நாட்களில் 100% தடுப்பூசி செலுத்தப்பட்டுவிடும். பொங்கல் விழாவை அனைவரும் எச்சரிக்கையாக கொண்டாட வேண்டும். மக்களின் உணர்வுகளை அரசு மதிக்கிறது. கட்டுப்பாடுகளை மக்கள் கடைப்பிடிக்க வேண்டும். காணும் பொங்கல் அன்று கூட்டம் கூடுவதை கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.

கரோனா வேகமாக பரவுவதற்கு ஒமைக்ரானின் தன்மை காரணம். அதனால் கூட்டம் கூடுவதைத் தவிர்க்க வேண்டும். புத்தாண்டு கொண்டாட்டத்தால் கரோனா பரவிவிட்டதாக கருத முடியாது. கரோனாவையும் கட்டுப்படுத்த வேண்டும், பொருளாதாரத்தையும் பாதுகாக்க வேண்டும் என்ற அடிப்படையில்தான் செயல்படுகிறோம்.

ஊரடங்கு அறிவிக்கும்போது மக்களின் பொருளாதாரம் மற்றும் வாழ்வாதாரத்தை கவனத்தில் கொள்ள வேண்டும். மக்கள் அச்சமடைய தேவையில்லை. ஆனால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மக்களிடம் எச்சரிக்கை உணர்வு ஏற்பட வேண்டும். வரும் ஜனவரி 23ம் தேதி நாடு முழுவதும் போலியோ சொட்டு மருந்து போடும் பணி நடைபெறுகிறது. புதுச்சேரியில் பாதுகாப்பாக நடைபெறுவதற்கான ஏற்பாடுகளை சுகாதாரத்துறை செய்திருக்கிறது” என்றார்.

பேரிடர் மேலாண்மை தலைவரை ஆளுநர் செயல்படவிடுவதில்லை என்று முன்னாள் முதல்வர் நாராயணசாமியின் குற்றச்சாட்டு தொடர்பாக நிபுணர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த ஆளுநர் தமிழிசை , “பேரிடர் மேலாண்மை ஆணையம் முதல்வர் தலைமையில் செயல்படுகிறது. டாக்டர் என்ற முறையில் முடிவுகள் செயல்பாட்டை கண்காணிக்கிறேன். புதுச்சேரி மக்களுக்கு நல்லது நடக்க முதல்வரும் நானும் இணக்கமாக இருக்கிறோம்” என்றார் தமிழிசை சவுந்தரராஜன்.