சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) இன்று வெளியிட்ட அணிகளுக்கான டெஸ்ட் தரவரிசைப் பட்டியலில் இந்திய அணி முதலாவது இடத்திலிருந்து 3-வது இடத்துக்குச் சரிந்துள்ளது. மூன்றாவது இடத்திலிருந்த ஆஸ்திரேலிய அணி முதல் இடத்துக்கு முன்னேறியுள்ளது.

இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் தொடரை 4-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணி அபாரமாகக் கைப்பற்றியது. இதன் மூலம் 3-வது முறையாகக் கோப்பையை ஆஸி.அணி தக்கவைத்தது. பிரிஸ்பேன், மெல்போர்ன்ஸ், ஹோபர்ட், அடிலெய்ட் ஆகிய இடங்களில் நடந்த போட்டிகளில் இங்கிலாந்தை வீழ்த்தியது ஆஸ்திரேலிய அணி.

இந்த வெற்றியால் தரவரிசையில் 119 புள்ளிகளுடன் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி முதலிடத்தைப் பிடித்தது. அதுமட்டுமல்லாமல் டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கான தரவரிசையிலும் ஆஸ்திரேலிய அணி 2-வது இடத்தைப் பிடித்துள்ளது.

நியூஸிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் கைப்பற்றி 116 புள்ளிகளுடன் இந்திய அணி முதலிடத்தைத் தக்கவைத்திருந்தது. அதன்பின் செஞ்சூரியனில் நடந்த தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வென்று தொடர்ந்து முதலிடத்தில் இருந்தது.

ஆனால், ஜோகன்னஸ்பர்க், கேப்டவுனில் நடந்த 2-வது மற்றும் 3-வது டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்காவிடம் அடைந்த தோல்வியால், முதலிடத்திலிருந்து 3-வது இடத்துக்கு இந்திய அணி சரிந்தது.

வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்ததையடுத்து, உலக டெஸ்ட் சாம்பியன் நியூஸிலாந்து அணி 117 புள்ளிகளுடன் தொடர்ந்து 2-வது இடத்தில் நீடிக்கிறது.

தென் ஆப்பிரிக்கப் பயணத்தை முடித்துக்கொண்டு இந்திய அணி தாயகம் திரும்பியவுடன் இலங்கை அணியுடன் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. இந்தத் தொடரைக் கைப்பற்றினால், மீண்டும் முதலிடத்தைப் பிடிக்க வாய்ப்புள்ளது.

பாகிஸ்தான் அணி ஒரு இடம் சறுக்கி 6-வது இடத்தில் உள்ளது. இலங்கை, மே.இ.தீவுகள், வங்கதேசம், ஜிம்பாப்வே அணிகள் முறையே 7 முதல் 10 இடங்களில் உள்ளன.