மதுரை புறநகர் மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த சோழவந்தான், வாடிப்பட்டி, பாலமேடு, அலங்காநல்லூர், திருமங்கலம், உசிலம்பட்டி ஆகிய பேரூராட்சி, நகராட்சித் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களுக்கு கட்சியின் அங்கீகாரக் கடிதத்தை முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வழங்கிய பின்னர் கூறியதாவது:

திமுக மீதான எதிர்ப்பு வாக்குகள் அதிமுகவுக்கு ஆதரவான வாக்குகளாக மாற வேண்டும். அதற்கு தொண்டர்கள், நிர்வாகிகள், வேட்பாளர்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். திமுக அரசு அறிவித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை.

தற்போது அதிமுக ஆட்சியில் இருந்திருந்தால் பொங்கல் பரிசாக 5,000 ரூபாய் வழங்கி இருக்கும். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக அதிகார துஷ்பிரயோகம் செய்தால் ஜனநாயக முறையில் போராடி முறியடிப்போம். இவ்வாறு அவர் தெரிவித்தார். நிகழ்ச்சியில் உசிலம்பட்டி எம்எல்ஏ அய்யப்பன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.