புளியந்தோப்பு கே.பி.பார்க் பகுதியில் கட்டப்பட்டுள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளின் ஸ்திரத்தன்மை குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க சென்னை ஐஐடி நிபுணர் குழுவிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இக்குழுவின் அறிக்கை கிடைத்த பிறகு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்துள்ளார்.

சென்னை புளியந்தோப்பு கே.பி.பார்க் பகுதியில் குடிசை மாற்று வாரிய குடியிருப்புகள் பழுதடைந்ததால், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு அங்கு வசித்தவர்கள் வெளியேற்றப்பட்டனர். அதையடுத்து ரூ.250 கோடியில் 1,900 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டது.

பொதுமக்கள் பயன்பாட்டுக்கு தயாராக இருந்த இந்த குடியிருப்புகள், கரோனா பாதிப்பு அதிகமாக இருந்தததால், கரோனா வார்டாக மாற்றப்பட்டிருந்தது. ஒதுக்கீடுதாரர்கள் தொடர்ந்து தங்களுக்கு வீடுகளை ஒதுக்கும்படி போராட்டம் நடத்தியதால் சுமார் 100 பேருக்கு வீடுகள் வழங்கப்பட்டன.

இந்நிலையில் இந்த குடியிருப்பில் உள்ள தூண்கள், வீடுகளின் சுவர்கள், ஜன்னல்கள், கதவுகளில் இருந்த சிமென்ட் பூச்சுகள் தொட்டாலே உதிரும் நிலையில் இருப்பதாகவும், கட்டிடத்தின் உறுதித்தன்மை கேள்விக்குறியாக இருப்பதாகவும் குடியிருப்புவாசிகள் புகார் தெரிவித்தனர்.

இத்தகவல் சமூக வலைத்தளங்களிலும் பரவியது. இதுகுறித்து எழும்பூர் திமுக எம்எல்ஏவும் குடிசை மாற்று வாரிய அதிகாரிகளிடம் தெரிவித்ததுடன், குடியிருப்புகளுக்கு நேரடியாக சென்று ஆய்வு நடத்தினார். இதையடுத்து சிமென்ட் பூச்சு பெயர்ந்த இடங்களில் சரிசெய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆகியோர் நேற்று மேற்கண்ட குடியிருப்புகளை ஆய்வு செய்தனர். அதையடுத்து அமைச்சர் தா.மோ.அன்பரசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

சென்னையில் கரோனா நோய்த் தாக்குதல் அதிகமாக இருந்த நேரத்தில் இந்த குடியிருப்பை கரோனா வார்டாக பயன்படுத்த குடிசை மாற்று வாரியத்திடம் அனுமதி பெற்று சென்னை மாநகராட்சி பயன்படுத்தி வந்தது. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கரோனா வார்டாக இந்த குடியிருப்புகள் இருந்தன. குடியிருப்புகளில் ஒதுக்கீடு பெற்றவர்கள் தங்களுக்கு வீடுகளை ஒதுக்க வேண்டும் என்று கோரினர்.

குடியிருப்பில் சில மராமத்துப் பணிகளை முடித்தபிறகு ஒதுக்கித் தருகிறோம் என்றோம். குடியிருப்புகளில் சேதமடைந்தள்ள குடிநீர் குழாய்கள், கழிவுநீர் குழாய்கள், இயங்காமல் இருக்கும் மின்தூக்கிகளை விரைவில் சரிசெய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளோம். இவற்றை சரிசெய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. கடந்த ஆட்சியில் கட்டப்பட்ட இக்குடியிருப்புகளின் ஸ்திரத்தன்மை குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிப்பதற்காக இது சென்னை ஐஐடி நிபுணர் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இக்குழுவின் அறிக்கை கிடைத்த பிறகு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். கட்டுமானம் மோசமாக இருந்தால் தொடர்புடைய அனைவர் மீதும் துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அமைச்சர் சேகர்பாபு கூறும்போது, “இந்த குடியிருப்புகளை உடனடியாகச் சரிசெய்ய முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இக்குடியிருப்புகளில் குடியேற அரசு அனுமதி அளிக்கவில்லை. மக்கள் தாமாகவே வந்து குடியேறியுள்ளனர். மராமத்துப் பணிகளை முடித்த பிறகு வீடுகள் ஒதுக்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது. குடியிருப்புகள் ஸ்திரத்தன்மையுடன் இருந்தால் மட்டுமே மக்களுக்கு வீடுகள் ஒதுக்கப்படும். ஸ்திரத்தன்மை இல்லாவிட்டால் மாற்று ஏற்பாடுகள் செய்யப்படும்” என்றார்.