மாநிலங்களவை நியமன உறுப்பினர் பதவி ஏற்பு விழாவில் நேற்று இசையமைப்பாளர் இளையராஜா கலந்துகொள்ளவில்லை. மாறாக, இந்தக் கூட்டத்தொடரில் வரும் நாட்களில் அவர் பங்கேற்பார் என கூறப்படுகிறது.

அந்தந்த துறைகளில் சிறந்த விளங்குபவர்கள் குடியரசுத் தலைவரால் மாநிலங்களவை நியமன உறுப்பினர்களாக நியமிக்கப்படுவர். அந்த வகையில், இசையமைப்பாளர் இளையராஜா, தடகள வீராங்கனை பி.டி.உஷா, திரைக்கதை எழுத்தாளர் வி.விஜயேந்திர பிரசாத், வீரேந்திர ஹெக்டே ஆகியோர் மாநிலங்களவை நியமன உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர். தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி தனது வாழ்த்துகளை தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், நேற்று நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது. அப்போது மாநிலங்களவை நியமன உறுப்பினர்கள் ஒவ்வொருவராக பதவி ஏற்க அழைக்கப்பட்டனர். அப்போது, மாநிலங்களவைத் தலைவர் வெங்கையா நாயுடு இளையராஜா என அழைத்ததும், அனைவரும் கைத்தட்டினர். ஆனால், இளையராஜா இசை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக அமெரிக்கா சென்றிருந்ததால் அவரால் பதவி ஏற்பு விழாவில் கலந்துகொள்ள முடியவில்லை.

இன்று காலை அவர் அமெரிக்காவிலிருந்து விமானம் மூலம் அவர் சென்னை வந்தடைந்தார். அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. நேற்று கூட்டத்தொடர் தொடங்கியிருக்கும் நிலையில், வரும் நாட்களில் மாநிலங்களவைக்குச் சென்று, நியமன உறுப்பினராக அவர் பதவி ஏற்பார் என தகவல் வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here