ஆன்லைன் சூதாட்டத் தடை அவசர சட்டம் எப்போது வரும்? அதனை உடனே பிறப்பிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் அடுத்தடுத்து வெளியிட்டுள்ள பதிவுகளில் கூறியுள்தாவது: ”தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்வது குறித்து அரசுக்கு பரிந்துரைப்பதற்காக வல்லுநர் குழுவுக்கு அளிக்கப்பட்ட இருவார அவகாசம் நிறைவடைந்து விட்டது. ஆனாலும், அக்குழுவின் அறிக்கை தமிழக அரசிடம் தாக்கல் செய்யப்பட்டதாக இதுவரை தகவல் இல்லை.

ஆன்லைன் சூதாட்டத்தின் தீய விளைவுகளும், அதை தடை செய்ய வேண்டியதன் தேவைகளும் அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்டவை தான். தடை தாமதமாகும் ஒவ்வொரு நாளும் புதிய தற்கொலைகள் நிகழக்கூடும். வல்லுநர் குழு அமைக்கப்பட்ட பிறகு ஒருவர் தற்கொலை செய்து கொண்டதே இதற்கு சாட்சி.

எனவே, வல்லுனர் குழுவின் அறிக்கையைப் பெறுவதில் எந்த தாமதமும் செய்யக்கூடாது. உடனடியாக குழுவின் அறிக்கையைப் பெற்று நாளை நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் ஆன்லைன் சூதாட்டத் தடை அவசர சட்டத்திற்கு ஒப்புதல் பெற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.