தமிழகத்தின் 18 மாவட்டங்களில் மாநில சராசரியைவிட தொற்று விகிதம் அதிகமாக உள்ளதாக, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சென்னை, ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் இன்று (ஆக.16) ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:

“தமிழகத்தில் தினசரி தொற்று 2,000 என்ற அளவில் இருக்கிறது. சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் சற்று குறைகிறது. சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் மதம் மற்றும் திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் சார்ந்த கூட்டங்கள் அதிகமாகக் கூடுவதால் தொற்று அதிகமாகிறது.

500-க்கும் மேற்பட்டவர்கள் வசிக்கும் குடியிருப்பில் ஒருவருக்குத் தொற்று ஏற்பட்டு மற்றவர்களுக்குப் பரவுகிறது. எனவே, அந்த இடங்களில் கூடுதல் கவனம் செலுத்தியுள்ளோம். பணி செய்யும் இடங்களில் தொற்று ஏற்பட்டால், பாதிக்கப்பட்ட நபரின் குடும்பத்தினரும் பாதிக்கப்படுகின்றனர். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் அதனைக் கண்காணிக்கச் சொல்லியிருக்கிறோம்.

அதேபோன்று, கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களும் நமக்குச் சவாலாக இருக்கின்றன. தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களிலும் சவால் இருக்கிறது. 32 மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை 100-க்கும் குறைவாகத்தான் இருக்கிறது. தொற்று அதிகரிக்கும் மாவட்டங்களில் நோய்த்தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளோம்.

தமிழகத்தில் தொற்று விகிதம் 1.2 சதவீதமாக உள்ளது. கோயம்புத்தூரில் 2%, தஞ்சாவூரில் 2%, அரியலூரில் 1.9% என 18 மாவட்டங்களில் மாநில சராசரியை விட தொற்று விகிதம் அதிகமாக இருக்கிறது.

மகாராஷ்டிராவில் மீண்டும் டெல்டா பிளஸ் கரோனா தாக்கம் வரத் தொடங்கியுள்ளதாகச் செய்திகள் வருகின்றன. கேரளாவில் தொற்று அதிகமாவதால், எல்லையோர மாவட்டங்களில் தனிக்கவனம் செலுத்த அறிவுறுத்தியுள்ளோம். டெங்கு தடுப்புப் பணிகளையும் அனைத்து மாவட்ட ஆட்சியர்களையும் கண்காணிக்க அறிவுறுத்தியுள்ளோம்.

ஏப்ரல் மாதம் வரை தமிழகத்தில் தடுப்பூசி போடுபவர்களின் எண்ணிக்கை குறைவாகத்தான் இருந்தது. தற்போது வரை 1.97 கோடி பேர் முதல் தவணை செலுத்தியுள்ளனர். இரண்டாம் தவணையை 47 லட்சம் பேர்தான் செலுத்தியுள்ளனர். பொதுமக்கள் இரண்டாம் தவணையைச் செலுத்தவும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது”.

இவ்வாறு ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.