வேலூர் மாவட்டத்தில் இன்று நடைபெற்ற சிவில் சர்வீஸ் (யுபிஎஸ்சி) முதன்மை தேர்வில் 1,337 பேர் கலந்து கொண்டனர். 1,897 பேர் தேர்வு எழுத வரவில்லை.

மத்திய அரசு தேர்வாணையம் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் இந்திய குடிமைப்பணிக்கான முதல் நிலை தேர்வு (யுபிஎஸ்சி) நடத்தப்பட்டு வருகிறது. இத்தேர்வுகள் முதல் நிலை, முதன்மை மற்றும் நேர்காணல் என 3 கட்டங்களாக நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு சிவில் சர்வீஸ் தேர்வுக்கான அறிவிப்பு கடந்த மார்ச் மாதம் வெளியானது.

இணையதளம் மூலம் விண்ணப்பப்பதிவு மார்ச் மாதம் 4-ம் தேதி முதல் மார்ச் 24-ம் தேதி வரை நடைபெற்றது. கடந்த ஜூன் மாதம் 27-ம் தேதி நடைபெற இருந்த சிவில் சர்வீஸ் தேர்வு கரோனா பெருந்தொற்றால் தள்ளி வைக்கப்பட்டு, அக்டோபர் 10-ம் தேதி (இன்று) நடைபெறும் என மத்திய அரசு தேர்வாணையம் அறிவித்தது.

அதன்படி, நாடு முழுவதும் 712 காலிப்பணியிடங்களுக்கான இந்திய குடிமைப்பணிக்கான முதல் நிலை தேர்வுகள் இன்று நடைபெற்றது. தமிழகத்தில் சென்னை, மதுரை, வேலூர், கோவை உள்ளிட்ட முக்கிய நகரில் யுபிஎஸ்சி தேர்வுகள் நடைபெற்றன.

வேலூர் மாவட்டத்தில், வேலூர் விஐடி பல்கலைக்கழகம், தொரப்பாடி தந்தை பெரியார் பொறியியல் கல்லூரி, ஸ்ரீ வெங்கடேஸ்வரா மேல்நிலைப்பள்ளி, டிகேஎம் மகளிர் கல்லூரி, குடியாத்தம் செவன்த்டே பள்ளி என மொத்தம் 12 மையங்களில் சிவில் சர்வீஸ் தேர்வுகள் நடைபெற்றன.

ஒவ்வொரு தேர்வு மையத்திலும் 24 நபர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். தேர்வு எழுத வந்தவர்களின் உடல் வெப்ப நிலை பரிசோதனை செய்யப்பட்டு, தேர்வு மையத்துக்குள் தேர்வர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர். கரோனா பரவல் காரணமாக தேர்வு எழுத வந்தவர்கள் முகக்கவசம் அணிந்த, சானிடைசர் கொண்டு வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டனர். தேர்வு மையத்தில் தனிநபர் இடைவெளி விட்டு இருக்கைகள் அமைக்கப்பட்டிருந்தன.

எலக்ட்ரானிக்ஸ், மின்னனு சாதனப்பொருட்கள், கைபேசி, கால்குலேட்டர் உள்ளிட்ட பொருட்களை எடுத்துச்செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. காலை 9.30 மணி முதல் பகல் 12.30 மணி வரை எழுத்துத்தேர்வுகளும், பகல் 2.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை திறனறித் தேர்வும் நடைபெறுகிறது.

வேலூர் மாவட்டத்தில் 12 மையங்களில் சிவில் சர்வீஸ் தேர்வு எழுத 3,234 பட்டதாரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதில், 1,337 பேர் மட்டுமே கலந்து கொண்டனர். 1,897 பேர் தேர்வு எழுதவரவில்லை.

வேலூர் தொரப்பாடி தந்தை பெரியார் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற யுபிஎஸ்சி தேர்வை மாவட்ட ஆட்சியரும், வேலூர் மாவட்ட குடிமைப்பணி தேர்வு ஒருங்கிணைப்பாளருமான குமாரவேல் பாண்டியன், யுபிஎஸ்சி தேர்வு கண்காணிப்பு சிறப்பு அலுவலர் ஹர்பிரீத்சிங், தேர்வு பார்வையாளர் வள்ளலார் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.