மின்சார வாகனங்களை வாங்க மத்திய அரசு அளிக்கும் ஊக்கத்தொகை திட்டத்தின்கீழ் தமிழகத்தில் இதுவரை 14,366 வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

பெட்ரோல், டீசல் விலை அதிகரிப்பால் தினசரிப் போக்குவரத்துக்கு சொந்த வாகனத்தைப் பயன்படுத்துவோர், மாற்றுத் தீர்வாக மின்சார வாகனங்களை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்தியாவில் மின்சார வாகனங்களை விரைவாகப் பயன்பாட்டுக்குக் கொண்டுவரவும், உற்பத்தியை அதிகரிக்கச் செய்வதையும் நோக்கமாகக் கொண்டு ‘எஃப்எம்இ-2’ என்ற திட்டத்தைக் கடந்த 2019-ம் ஆண்டு மத்திய அரசு அறிவித்தது.

இந்நிலையில், அந்த திட்டத்தின்கீழ் மின்சார இருசக்கர வாகனங்களை வாங்குவோருக்கு வழங்கப்பட்ட ஊக்கத்தொகையை கிலோவாட் ஒன்றுக்கு ரூ.10 ஆயிரத்தில் இருந்து, ரூ.15 ஆயிரமாக அதிகரித்து கடந்த ஜூன் 11-ம் தேதி உத்தரவிடப்பட்டது. அதன்படி, மின்சார வாகனத்தின் விலையில் அதிகபட்சம் 40 சதவீதம் வரை ஊக்கத்தொகையாகப் பெறலாம். மேலும், ‘எஃப்எம்இ-2’ திட்டம் 2024 மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அரசின் இந்த அறிவிப்புகள் காரணமாக மின்சார வாகனங்களை வாங்குவோரின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது.

எரிபொருள் சேமிப்பு

மத்திய அரசின் கனரகத் தொழில்துறை தகவலின்படி, நாடு முழுவதும் இன்று மதியம் வரை 91,990 மின்சார வாகனங்களை வாங்க ரூ.276.47 கோடி ஊக்கத் தொகையாக அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு ஊக்கத் தொகையுடன் வாங்கப்பட்ட வாகனங்கள் மூலம் தினமும் சுமார் 59,371 லிட்டர் எரிபொருள் சேமிக்கப்படுவதாகவும், 1.35 லட்சம் கிலோ கார்பன்டை ஆக்ஸைடு வெளியேறுவது குறைவதாகவும் கனரகத் தொழில்துறை தெரிவித்துள்ளது. ஊக்கத்தொகையைப் பெற்று மின்சார வாகனங்களை வாங்குவதில் கர்நாடகாவுக்கு அடுத்தபடியாகத் தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது. கர்நாடகாவில் இன்றுவரை 20,115 மின்சார வாகனங்கள் ஊக்கத்தொகை திட்டத்தின்கீழ் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

வாங்கும்போதே கிடைக்கும் ஊக்கத்தொகை

இதுதொடர்பாக மின்சார வாகன விற்பனையாளர்கள் கூறும்போது, “தமிழகத்தில் இன்று (ஜூலை 29) மதியம் வரை 13,668 இருசக்கர வாகனங்கள், 695 மூன்று சக்கர வாகனங்கள், 3 நான்கு சக்கர வாகனங்கள் என மொத்தம் 14,366 வாகனங்கள் மத்திய அரசின் ஊக்கத்தொகை திட்டத்தின்கீழ் விற்பனை செய்யப்பட்டுள்ளன. எந்தெந்த நிறுவனத்தின், எந்த மாடல் வாகனத்துக்கு இந்த ஊக்கத்தொகை கிடைக்கும் என்பதை https://fame2.heavyindustry.gov.in/ModelUnderFame.aspx என்ற இணையதளத்தில் பொதுமக்கள் தெரிந்துகொள்ளலாம்.

இதே இணையதளத்தில், தங்களுக்கு அருகில் உள்ள விற்பனையாளர் விவரத்தையும் அறிந்துகொள்ள முடியும். அரசு குறிப்பிட்டுள்ள மாடல் மின்சார வாகனத்தை வாங்கும்போதே மொத்த விலையில் ஊக்கத் தொகையைக் கழித்து விலைக்குறைப்புடன் வாகனத்தை வாடிக்கையாளர்கள் பெற்றுக் கொள்ளலாம்” என்று தெரிவித்தனர்.