கள்ளர் வகுப்பைச் சேர்ந்த மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்காக சீர்மரபினர் இயக்ககம் சார்பாக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் கள்ளர் வகுப்பினர் அடர்த்தியாக வாழும் மதுரை, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் 295 அரசு கள்ளர் பள்ளிகள் செயல்படுகின்றன. இதில் பயிலும் கள்ளர் பிரிவு மாணவர்களுக்கு 3 திட்டங்கள் மூலம் உதவித் தொகையும், பிற அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் சைக்கிள், மடிக்கணினி உள்ளிட்டஉபகரணங்களும் வழங்கப்படுகிறது.
இருந்தபோதிலும், கள்ளர் சீரமைப்புப் பள்ளிகளில் 2016-ம் ஆண்டு முதல் மாணவர் சேர்க்கை தொடர் சரிவைச் சந்தித்து வந்தது. இதற்குப் பள்ளிகளின் தரம் உயர்த்தாமை, தேர்ச்சி விகித பாதிப்பு, ஆங்கில வழிக் கல்வி இல்லாமை, உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் கூறப்பட்டன. இந்நிலையில், கடந்த 2 ஆண்டுகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்து வருகிறது.
அதாவது, கள்ளர் சீரமைப்பு பள்ளிகளில் கடந்த 2016-ம் ஆண்டில் 27 ஆயிரத்து 227 மாணவர்கள் பயின்று வந்தனர்.
பின்னர், 2017-ல் 26,533 ஆகவும், 2018-ல் 24,818, 2019-ல் 24,450 ஆகவும் மாணவர்களின் எண்ணிக்கை கடும் சரிவைச் சந்தித்து வந்தது. இதற்கிடையே, 2020-ம் ஆண்டில் கள்ளர் சீரமைப்பு பள்ளிகளில் சேர்க்கை 462 என்ற அளவில் கணிசமாக உயர்ந்தது. இந்நிலையில், கடந்த ஆண்டை விட நடப்பாண்டில் 2,695 பேர் கூடுதலாகச் சேர்க்கை பெற்று, 27 ஆயிரத்து 607 மாணவர்கள் என்ற நிலையை எட்டியுள்ளது.
இதுகுறித்து கள்ளர் சீரமைப்பு இயக்குநரகத்தின் இணை இயக்குநர் சி.செல்வராஜ் கூறியது:
அரசு கள்ளர் சீரமைப்பு பள்ளிகளில் சேர்க்கை பாதிப்பு குறித்துப்பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை தனிக் கவனம் செலுத்தியது. கரோனா ஊரடங்கு காலகட்டத்தில் இணையவழியில் கல்வியைத் தொடர முடியாத மாணவர்களின் பகுதிகளுக்கே ஆசிரியர்கள் நேரடியாகச் சென்று பாடம் நடத்தினர்.
நடப்பாண்டில் 240 தொடக்க,நடுநிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி அறிமுகம் செய்யப்பட்டது. இதற்கு நல்ல வரவேற்புகிடைத்தது மட்டுமில்லாமல், 391 மாணவர்கள் ஆங்கில வழியில் சேர்ந்தனர்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
கள்ளர் சீரமைப்பு பள்ளிகள் தொடர்பாகப் பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கரிடம் கேட்டபோது, “ பள்ளிகளின் உள்கட்டமைப்பை அதிகரிக்க ரூ.6 கோடி செலவில் பழுது,பராமரிப்பு பணிகள், மாணவர்களுக்கு ஆங்கில பேச்சாற்றல் மற்றும் தனித்திறன் வளர் பயிற்சி உள்ளிட்ட ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்படவுள்ளன.
இதன் காரணமாக அடுத்த வரும் ஆண்டுகளில் மாணவர் சேர்க்கை நிச்சயமாக ஏறுமுகமாகவே இருக்கும்” என்று நம்பிக்கை தெரிவித்தார்.